Wednesday, September 30, 2015

பூமியை விட்டால் வேறு இடம்: வணக்கம் 'செவ்வாய்'!!!

Wednesday, September 30, 2015
பூமியை விட்டால் வேறு இடம் இல்லாமல் தவித்த மனிதர்களை வரவேற்க, இப்போது செவ்வாய் கிரகம் தயாராக இருக்கிறது. இங்கு தண்ணீர் இருப்பதை 'நாசா' உறுதி செய்துள்ள நிலையில், நாம் செவ்வாயில் குடியேறும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.

சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சில நாடுகள் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பி உள்ளன. இந்தியா சார்பில் 'மங்கள்யான்' அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா', செவ்வாய் கிரகம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2006ல் 'மார்ஸ் ரெகோனாய்சன்ஸ் ஆர்பிட்டர்' (எம்.ஆர்.ஓ.,) என்ற விண்கலம் ஏவப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட 'இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர்' எடுத்த புகைப்படத்தில் நீர் ஓடுவதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது. 'செவ்வாயில் நீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது' என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.     
 
பள்ளத்தாக்குகளில் நீர் ஓடுவது போன்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளன. படத்தில் காணப்படும் விரல் தடம் போன்ற அமைப்பு தான் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரம் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நீர் எங்கிருந்து வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை. 'நிலத்தடி நீர் அல்லது பனிக்கட்டிகள் உருகுவதால் நீர் ஓடலாம்' என்கின்றனர். அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.  

 
யார் இந்த லுஜேந்திர ஓஜா:
 
செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட 'நாசா' விஞ்ஞானிகளின் வழி காட்டியவர் லுஜேந்திர ஓஜா. இவர் தற்போது அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 'கோள் அறிவியல்' துறையில் பி.எச்டி., படிக்கிறார். இவர் முதலில் நிலநடுக்கம் தொடர்பான துறையில் கவனம் செலுத்தி வந்தார். பின் பூமி, செவ்வாய், நிலவு தொடர்பான ஆய்வில் ஈர்க்கப்பட்டு 2012ல் பி.எஸ்சி., (ஜியோ இயற்பியல் வித் கோள் அறிவியல்) படிப்பை அரிஜோனா பல்லைக்கழகத்தில் முடித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஒரு நேபாளி. குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆய்வில் ஈடுபட்ட நாசா விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பிரட் மெக்வென் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது எம்.ஆர்.ஓ., எனப்படும் 'மார்ஸ் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர்' என்பதை ஆராய்ச்சி செய்த போது, தற்செயலாக செவ்வாய் கிரகத்தின் பரப்பளவில் தண்ணீர் உறை நிலையில் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

புதிய முறையில் ஆய்வு செய்தால் இதை உறுதிப்படுத்தாலம் என நாசா விஞ்ஞானிகளிடமும் கூறினார். மேலும் செவ்வாயில் ஆர்.எஸ்.எல்., (ரெகரிங் ஸ்லாப் லீனேஜ்) எனும் செவ்வாயில் நீர் வழிந்தோடியதற்கான தடத்தை கண்டுபிடித்தார். அது நிச்சயம் தண்ணீராகத்தான் இருக்கும். உப்புப் படிவும் போல இது தென்படுகிறது என்று தெரிவித்தார். 2011ம் ஆண்டு ஆல்பரட் மெக்வெனும், இவரும் சேர்ந்து இதனை அறிவித்தனர். இதையடுத்தே அதுகுறித்த ஆய்வுகளை நாசா தீவிரப்படுத்தியது. அறிவியல் ஆய்வுகளில் அசாத்திய திறனுடன் ஈடுபடும் இவர், இதற்கு முன் கிடார் வாசிப்பில் கைதேர்ந்தவராக இருந்தார்.                  

ஆய்வு பணிகள்:

* 2008: அரிஜோனா பல்கலையின் இயற்பியல் மற்றும் வளிமண்டல் அறிவியல் துறை, உயிர் அறிவியல் துறை
* 2009 : தெற்கு கலிபோர்னியா நிலநடுக்க மையம்
* 2010 -11 : லூனார் மற்றும் கோள் ஆய்வகம், அரிஜோனா பல்கலை
* 2010 - 12 : லூனார் ரெகனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் லூனார் மேப்பிங் மற்றும் மாடலிங் புராஜக்ட்
* 2011 - 12 : கோள் அறிவியல் இன்ஸ்டிடியூட் (பி.எஸ்.ஐ.,)
* 2013 ஜூன் - ஆக., : ஜெட் புரோபல்சன் லெபாரட்டரி   

 

'கூகுள்' பாராட்டு:
 

செவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதி செய்தது. இதையடுத்து கூகுள் தனது தேடல் பக்கத்தில் சிறப்பு "டூடுள்' போட்டு கொண்டாடியது. கூகுள் முகப்பு பக்கத்தின் நடுவில் உள்ள "ஓ' என்ற எழுத்தை செவ்வாய் போன்று வடிவமைத்தது. அது சுற்றி வரும் போது ஒரு கார்ட்டூன் உருவம் டம்ளரில் தண்ணீரை வைத்து "ஸ்ட்ரா' போட்டு உறிஞ்சுவது போன்று காட்டப்பட்டது. அந்த படத்தின் மீது "மவுஸை' வைத்தால் "செவ்வாயில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்ற வாசகம் வரும். அதை "கிளிக்' செய்தால் "மார்ஸ்' என்ற சொல்லின் தேடல் பக்கத்துக்கு செல்கிறது.     


"நெட்டிசன்'கள் கிண்டல்:
 

எந்தவொரு விஷயத்தையும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதை "நெட்டிசன்'கள் வழக்கமாக கொண்டுள்ளனர். செவ்வாயில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் கிண்டல் செய்து பதிவுகள் போட்டு வருகின்றனர்.காவேரி டெல்டா பாசனத்துக்கு செவ்வாயிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும், பூமியில் உள்ள நீரை முதலில் கண்டுபிடியுங்கள் பின் செவ்வாய்க்கு செல்லலாம் என்றும் பலவிதங்களில் கலாய்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment