Wednesday, September 30, 2015

தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்!

Wednesday, September 30, 2015
சென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:
தி.மு.க., - சக்கரபாணி:
 
காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் பன்னீர்செல்வம்:
 
 காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் கட்சியை சேர்ந்த, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரின் தொகுதிகளில், மூன்று ஆண்டுகளாக, தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கவில்லை.

அமைச்சர் வேலுமணி:
 
 பரிந்துரை செய்ததில், தாமதம் ஏற்பட்டிருக்கலாம். பரிந்துரை செய்த பணிக்கு, இடம் கிடைக்காமல் இருக்கலாம். எந்த திட்டம்; என்ன பணி என கூறினால் நடவடிக்கை
எடுக்கப்படும்.

சக்கரபாணி:
 
ஒவ்வொருவருக்கும், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தீர்கள்; இன்னமும் வழங்கவில்லை. என் தொகுதியில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு ஒரு முறைதான், குடிநீர் கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கு, இலவச பஸ் பாஸ் தரப்படும் என்று கூறினீர்கள்; இன்னும் வழங்கவில்லை. அரசின் கடன்சுமையை குறைத்து, தமிழர்களை தலை நிமிர செய்வோம் என்றீர்கள். ஆனால், கடன், 4 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

அமைச்சர் பன்னீர்செல்வம்:
 
தமிழக அரசு வாங்கியுள்ள கடன், மூலதனத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், 4 லட்சம் கோடி கடன் என்பது தவறு. பொதுத் துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து, மொத்தம், 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதுவும், 14வது நிதிக்குழு ஆணையம் நிர்ணயித்த வரையறைக்குள் இருக்கிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment