Monday, September 21, 2015
யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் என்பது தவிர்க்க முடியாததாகும். இதனை இனப்படுகொலை என அர்த்தப்படுத்த முடியாது. வடக்கில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை. இதனை ஐ.நா. வும் ஏற்றுக்கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்:-
இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எமக்கென்று நீதித்துறை உள்ளது. எனவே யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணை அவசியமில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை மூலம் இலங்கையின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது. இதனைக் கடுமையாக எதிர்க்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமெரிக்காவின் தேவைக்காகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைத்தது. இதன்போது சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு ஐ.நா. வின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கே ஆதரவு வழங்கியதோடு அமெரிக்காவின் பிரேரணையை எதிர்த்தன.
அவ்வாறு எதிர்த்த நாடு பல நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்கெடுப்புக்கு எடுத்த போது சமூகமளிக்கவில்லை. எனவே அமெரிக்காவின் பிரேரணையை எதிர்த்தது இலங்கைக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.
இவ்வாறானதொரு புறச்சூழலில் இன்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை இறையாண்மை கொண்ட நாடு. எமக்கென்று வலுவான நீதித்துறை உள்ளது.
எனவே ஐ.நா. வின் பரிந்துரை எமது நாட்டு இறையாண்மையை மீறுவதாகும். இதனை எதிர்க்கின்றோம். ஏற்றுக் கொள்ள முடியாது.கடந்த ஆட்சிக்காலத்திலும் எமக்கெதிரான பிரேரணைகளையும் சர்வதேச விசாரணை வலியுறுத்தலையும் அன்றைய ஆட்சியாளர்கள் எதிர்த்தனர்.
எனவே அதே நிலைப்பாட்டையே இன்றைய ஆட்சியினரும் முன்னெடுக்க வேண்டும்.எவர் ஆட்சி செய்தாலும் நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது.
கடந்த ஆட்சியினரால் நல்லிணக்க ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. அதன் பரிந்துரைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோன்று உதாலக கமிஷன், பரணகம கமிஷன் போன்றவை நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இக் கமிஷன்களின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு இவ்வறிக்கை 2002மி 2012ம் ஆண்டுகளை அடிப்படையாக வைத்தே வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்பதாக சந்திரிகா ஆட்சிக்காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன. இது தொடர்பாக மங்கள சமரவீர பதிலளிக்க வேண்டும். இலங்கையில் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூற முடியாது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதும் அன்று நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஊடாகவே ஆகும்.
எனவே சர்வதேசம் எமது நீதித்துறையை சவாலுக்கு உட்படுத்த இடமளிக்க முடியாது. அத்தோடு இங்கு இடம்பெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாகும்.
இதில் விடுதலைப் புலிகளின் அதிகமானோர் தமிழர்கள் ஆவார்கள். வடக்கில் வாழ்ந்த மக்களிலும் அதிகமானோர் தமிழர்கள். எனவே யுத்த மோதல்களில் உயிரிழப்புக்கள் என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இதனை இனப்படுகொலை என அர்த்தப்படுத்த முடியாது.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் இனப்படுகொலை என்பதை நிராகரித்துள்ளது. ஆனால் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் தனிப்பட்ட ரீதியில் ஆட்கள் கடத்தப்பட்டு கொலைகள் இடம்பெற்றிருந்தால் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் படையினர் தொடர்புபட்டிருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.
No comments:
Post a Comment