Friday, September 25, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்
இலங்கை தொடர்பிலான உத்தேச யோசனை திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தேசிக்கப்பட்டிருந்த ஆவணத்தில் திருத்தங்களுடன் புதிய ஆவணம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் யுகோஸ்லாவியாவின் நாடான மெசிடோனியா,
மொன்டென்கரோ, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வட அயர்லாந்து ஆகியன கூட்டாக
இணைந் இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளன.
நல்லிணக்கம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை மேம்பாடு என்ற தலைப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச யோசனையில் இறுதி நிமிடங்கள் வரையில் திருத்தங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த யோசனை குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற இலங்கை அரசாங்கத்தின் புரிதல் வரவேற்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக சர்வதேச சுயாதீன விசாரணை நடத்துவதாக அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதி வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment