Saturday, August 01, 2015
மிகுந்த அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டதும், பிற்காலத்தில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் புடம்போடப்பட்டவர்களுமான அம்பாறை மாவட்ட மக்கள், இன்னும் கண்டிக்கும் வன்னிக்கும் தங்களது தலைமைத்துவங்களை வழங்கி விட்டு கைசேதப்படப் போகிறார்களா? எனக் கேள்வி எழுப்புகிறார் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்.
அவருடனான பிரத்தியேக் அசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வட்டைக்கடைகள் திறப்பது போல் தேர்தல் காலங்களில் மட்டும் இப்பிராந்தியங்களுக்கு வந்து தற்காலிக கடைகளைத் திறந்து விட்டு பின்னர் தேர்தல் முடிந்த கையோடு கடைகளை மூடிச்செல்லும் முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்லும் அவர்களின் பின்னால் செல்லும் அம்பாறை மாவட்ட மக்கள் கண்ட நன்மைகள் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தலைமைத்துவத்தை தாங்களே உருவாக்கியதாகவும் புதிய தலைமையினால் மர்ஹும் அஷ்ரபின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனதன் காரணமாகவே தான் தேசிய காங்கிரசை உருவாக்கி தலைவர் அஷ்ரபின் அபிலாசைகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் தலைவிரித்தாடிய கொடிய பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அப்போதிருந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதாகவும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்பை தாங்களே பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் கைகட்டி வாய்மூடி சேவகம் செய்து கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களை கொழும்புத் தலைமைத்துவத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்டதாகவும் அதனூடாக கிழக்கு மக்கள் தங்களை தாங்களே ஆளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் இவ்வாறானதொரு தவறைச் செய்து எங்களை ஆளுபவர்களாக கண்டியச் சேர்ந்தவர்களோ அல்லது வன்னியச் சேர்ந்தவர்களோ வருவததை இம்மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தான் இவ்வாறான கருத்துக்களை கூறுவதால் தன்னை ஒரு பிரதேசவாதியாக சிலர் விமர்சிப்பதாகவும் எங்களை நாங்களே ஆள்வது எவ்வகையில் பிரதேசவதமாகும் என கேள்வியெழுபினார்.
தங்களை முஸ்லிம் சமூகத்தின் காவலர்கள் எனக்கூறும் இவர்கள் இதுவரை இம்மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் வீணாக எங்களுக்குள் பிரிவினையை உருவாக்கி அவர்கள் சுகபோகம் அனுபவித்துவருவதாகவும் இந்நிலை மாறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கடந்த காலங்களில் வெறும் உரிமைப் பேச்சுக்களையும் மக்களின் உணர்வுகளை தூண்டும் கருத்துக்களையும் கூறி மக்களது ஆணையைப் பெற்ற அவர்களது சேவகர்கள் இம்மக்களின் எதிர்பார்ப்புக்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்றும் நாங்கள் இன்னும் எங்களுக்குள் பிரிந்து நில்லாது ஒன்றுபட்டு நமது பிரதேசத்தை செழிப்பாக ஒன்றுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த காலங்களில் தேசிய காங்கிரசுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இப்பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு பாரிய பங்காற்றியதாகவும் இவ்வாறக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இம்மக்களுக்கு ஏதாவது இவர்களால் செய்ய முடிந்துள்ளதா என வினவினார்.
உதாரணத்துக்கு கல்முனைத் தொகுதியின் சாய்ந்தமருது பிரதேசத்தில் தான் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அதாவுல்லாஹ், அங்கு காலம் காலமாக இருந்து வந்த வைத்தியசாலை சுனாமியால் முற்றாக சேதமுற்றதன் காரணாமாக அம்மக்களுக்காக வைத்தியசாலை ஒன்றை அமைக்க வேண்டிய அவசர தேவை இருந்தது. அதனை குறித்த இடத்தில் அமைப்பதில் சிலருக்கு விருப்பமின்மை இருந்தது இந்நிலையில் சாய்ந்தமருது மக்களுக்காக வைத்தியசாலையை அவர்கள் விரும்பிய இடத்தில் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை நாங்கள் செய்தோம் அதனூடாக கம்பீரத்துடன் அங்கு வைத்தியசாலை காட்சியளிக்கின்றது.
பிரதேச செயலகத்தை அமைத்தோம் வீதிகளை புனரமைத்தோம். நீர்விநியோக சபையின் பொறியலாளர் பிரிவை அமைத்தோம் பாலங்கள் அமைத்தோம் அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உள்ளுராட்சி சபையை நிறுவுவதற்காக, கல்முனையில் வாழும் எந்த பிரதேசத்துக்குமோ சமூகத்துக்குமோ பாதிப்பு ஏற்படாத வகையில் நான்கு வலயங்களாகப் பிரித்து கல்முனைக்கு மாநகர சபையும் சாய்ந்தமருது உள்ளிட்ட ஏனைய மூன்று பிரதேசங்களுக்கும் நகர சபையும் வழங்க இருந்த நிலையில் அம்முயற்ச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தடுக்கப்பட்டதையும் மக்கள் அறிவர் என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றும் எனக்கூறிய அவர், கடந்தகால தேர்தல் முடிவுகளை பாடமாகக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். கண்டித் தலைமைத்துவமோ அல்லது வன்னித் தலைமைத்துவமோ தங்களுக்குச் சவால் இல்லை என்று தெரிவித்த தேசிய காங்கிரசின் தலைவர், வன்னித் தலைமைத்துவத்தின் வருகையால் தங்களது வாக்கு வங்கியில் சரிவு எதனையும் ஏற்படுத்தவில்லை என்றும் அது மாவட்ட ரீதியில் எமது வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய காங்கிரசின் வியூகங்கள் பல வெற்றியடைந்த சம்பவங்களை எடுத்துக் கூறிய முன்னாள் அமைச்சர், மருதமுனை,நிந்தவூர்,அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை போன்ற ஊர்களுக்கு மாகாண சபை உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மருதமுனை மக்கள் அதிகமான வாக்குகளை வழங்கியிருந்த போதிலும் அம்மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பிரதி முதல்வர் பதவியைக் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்க முன்வரவில்லை என்றும் மருதமுனை போன்ற ஊர் மக்களுக்கு மாகாண சபை உறுப்பினர் போன்ற பதவிகளை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினால் வாக்குறுதியளிக்க முடியுமா எனவும் கேள்வியெழுபினார்.
இம்முறை தாங்கள் மேற்கொண்டுள்ள வியூகங்களின் ஊடாக தேசிய காங்கிரசின் வேட்பாளர்களே வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக தெரிவித்த அவர், ஏனைய கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகள் சிங்கள பிரதிநிதித்துவங்களையே அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த அம்பாறை மாவட்டத்திலேயே பிறந்து இம்மக்களுடன் இரண்டறக்கலந்து இவர்களது சுழிவுகள் நெளிவுகளை அறிந்த தேசிய காங்கிரசின் தலைமை உள்ளிட்ட குழுவினரை ஆதரிப்பதன் ஊடாக மட்டுமே இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்த அதாவுல்லாஹ், இப்பிராந்திய எதிர்கால சிறார்களின் நன்மைகருதி ஒன்றுபடுமாறும் பணத்துக்கோ அல்லது ஆசைவார்த்தைகளுக்கோ அடிபணியாது நம்மை நாமே ஆளவேண்டும் என்ற அடிப்படையில் இப்பிராந்திய மக்களின் தேவைகளை அறிந்து செயற்படும் தேசிய காங்கிரசின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்தார்.
No comments:
Post a Comment