Saturday, August 1, 2015

குருதாஸ்பூர் தாக்குதல் தொடர்பான ராஜ்நாத் சிங் கருத்துக்கு பாகிஸ்தான் மறுப்பு!

Saturday, August 01, 2015
சண்டிகர், பஞ்சாபில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ள நிலையில் அவரது கருத்துக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினா நகரில் கடந்த திங்கட்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூவரும் அன்றைய தினமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இதுதொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்த அவர், ராவி ஆறு வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கூறினார். நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முயன்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அரசு எப்போதும் உறுதிபூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
 
இந்நிலையில், குர்தாஸ்பூர் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், பஞ்சாப்பில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. பாகிஸ்தானும் தீவிரவாத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், இந்திய ஊடகங்கள் எங்கள் நாட்டின் மீது குற்றம்சாட்டுவது துரதிருஷ்டவசமானது. தீவிரவாதத்தை அனைவரது பொதுவான எதிரியாகவே பார்த்து வருகிறோம். விசாரணை எதுவும் செய்யாமல் பிறர் மீது குற்றம் சுமத்துவது ஆரோக்கியமான போக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment