Saturday, August 1, 2015

ஓகஸ்ட் 18 ஆம் திகதி நிறுவப்படவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான மைத்திரி - மஹிந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வை ஆறு மாதங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும். அது சிங்கள பெளத்த மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவே அமையும்: டிலான் பெரேரா!

Saturday, August 01, 2015
ஓகஸ்ட் 18 ஆம் திகதி நிறுவப்படவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான மைத்திரி - மஹிந்த ஆட்சியில் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அதிகம் செல்லாது தமிழ் மக்களுக்கான தீர்வை ஆறு மாதங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும். அது சிங்கள பெளத்த மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவே அமையும்." - இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா. இதேவேளை, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்க 60 மாதங்களில் புதிய நாடு எனத் தெரிவித்துள்ளதானது
 
ஈழநாட்டின் உதயத்திற்கே என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐ.ம.சு.முவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "ரணில் விக்கிரமசிங்க 60 மாதங்களில் புதிய நாடு என்று தெரிவிக்கின்றார். நிச்சயம் அவர் புதிய நாட்டை உருவாக்குவார் என எனக்கு நம்பிக்கையுள்ளது. நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தி ஈழ நாட்டை அவர் நிச்சயம் ஏற்படுத்துவார். அதற்கான திட்டங்களுடனேயே ஐ.தே.க. - த.தே.கூ. ஆகியன புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்‌ஷ 2005 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்போது இந்நாடு எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
 
இதேவேளை, சிங்களப் பெரும்பான்மை மக்களது ஆதரவை அதிகம் பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ, சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே. இவர்கள் இணைந்து ஏற்படுத்தவுள்ள ஐ.ம.சு.மு. ஆட்சியில் தமிழ் மக்களுக்கு 6 மாதங்களுக்குள் 13 ஆவது திருத்தத்திற்குள் (13​-)​ தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்படும். அத்தீர்வானது சிங்கள பெளத்த மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்" - என்றார். 13+ தீர்வு காண்பதற்கு முன்னர் சுதந்திரக் கட்சி உடன்பட்டாலும் தற்போதுள்ள நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "தற்போதுள்ள நிலையில் 13+ என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. 13 க் இற்குள்ளேயே தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
 
அதாவது, 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில திருத்தங்களை நாங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதுடன் - அதில் அகற்றவேண்டிய விடயங்களை அகற்றவுள்ளதுடன் உள்வாங்கவேண்டிய விடயங்களை சேர்ப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்'' - என்றார். புலிகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ 2005 இல் பணம் வழங்கியதாக சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "சம்பிக்க ரணவக்க கடந்த காலங்களில் மஹிந்த ஆட்சியில் மிக முக்கிய பாத்திரத்தை வகித்தவர். அப்போதெல்லாம் மஹிந்த புகழ் பாடிய அவர், இப்போது ஏன் அவரை இகழ்கிறார்? அனைத்தும் அரசியல் இலாபத்துக்காகவே. அது மாத்திரமல்லாது 2005இல் மஹிந்தவுக்கும் புலிகளுக்கும் எந்தவிதமான கொடுக்கல், வாங்கல்களும் இடம்பெறவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
நல்லாட்சியிலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சம்பிக்க ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்'' -என்றார். மத்திய வங்கி ஆளுநரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தபோதிலும் ஏன் அவர் அதனைச் செய்யாது இருக்கிறார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, "ரணில், மைத்திரியை அடக்கியாள முற்படுகின்றார். இது அண்மையில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பின்போது அவர் மத்திய வங்கி ஆளுநரை அகற்றுமாறு ரணிலிடம் கோரியிருந்தபோதிலும் அதனை அவர் செய்யவில்லை எனக் குறிப்பிட்டதிலிருந்து எமக்குத் தெளிவாகின்றது.
 
எது எவ்வாறாயினும் எதிர்வரும் ஓகஸ்ட் 18ஆம் திகதி நிறுவப்படவுள்ள புதிய ஆட்சியில் நிச்சயம் ஆளுநர் நீக்கப்பட, மத்திய வங்கி மோசடி தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்கிக் கொடுக்கப்படும்'' - என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் லிபரல் கட்சித் தலைவர் ரஜீவ விஜேசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்...
 
சர்வதேச தரத்திலுள்ள விசாரணைக்கான பொறிமுறையை ஏற்படுத்த அரசு எடுத்துள்ள தீர்மானத்தின் பின்னணியில் வடக்கு மாகாண சபையிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான உடன்பாடுகளுடனே ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றது!
 
செப்ரெம்பரில் சர்வதேச தரத்திலுள்ள விசாரணைக்கான பொறிமுறையை ஏற்படுத்த அரசு எடுத்துள்ள தீர்மானத்தின் பின்னணியில் வடக்கு மாகாண சபையிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதற்கான உடன்பாடுகளுடனே ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றுக் குற்றஞ்சாட்டியது. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரட்ன அதனை நிராகரித்திருந்தார்.
 
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை இணங்கக்கூடிய சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணை ஒன்றை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும், மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிராகாரம் செப்ரெம்பரில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறைமை அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- "ராஜித குறிப்பிட்ட விடயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணையை நடத்துவதற்கான பொறுப்பை வட மாகாண சபையிடமே ஒப்படைக்கவுள்ளனர். இதற்கான உடன்பாட்டுடனேயே ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்படுகின்றது. அத்தீர்மானத்தை அவர்கள் வரவேற்று ஏற்றுக்கொள்வார்கள்.
 
 இதனால் எதிர்காலத்தில் நாங்கள் பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கைக்கு எதிராகவே செயற்படும். அது மாத்திரமல்லாது, சர்வதேச விசாரணையை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்பதுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாங்கள் ஒரு வருடத்துக்குள் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளோம். ஆகவே, அதன்படி நாங்கள், சிங்கள பெளத்த மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்போம்

No comments:

Post a Comment