Friday, August 28, 2015

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் 16 இந்தியர்கள்!!

Friday, August 28, 2015
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இந்தியாவைச் சேர்ந்த, 16 பேர் இணைந்திருக்கக்கூடும் என்ற உளவுத்துறை தகவல், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முயன்று வருகின்றனர். 
 
அதற்காக, படித்த இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில், அந்த அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நால்வர், ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்தனர். அவர்களில், ஆரீப் மஜித் என்பவரை மீட்ட மும்பை போலீசார், அவர் மீது, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தனர்; மற்ற மூவரும், சிரியா மற்றும் ஈராக் போரில் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், நாடு முழுவதும் காணாமல் போன, 17 பேர் குறித்த தகவல் இதுவரை கிடைக்காத நிலையில், இவர்கள், ஐ.எஸ்., அமைப்பு அல்லது அதன் தலைமையில் இயங்கும், ஜப்ஹத் அல் - நுஸ்ராவில் இணைந்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.

பயங்கரவாத பயிற்சிக்காக, வெளிநாட்டுக்குச் சென்ற, 17 பேரும் இளம் வயதினர்; இவர்களுடன் சென்ற ஒரு பெண் வீடு திரும்பிவிட்டார். கடந்த நவம்பரில், இந்தியாவுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் ஆபத்து ஏற்படும் என, உளவு அமைப்புகள் எச்சரித்தன. இதை உறுதி செய்வது போல், ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டதை உளவுத்துறை சுட்டிக்காட்டியது.
 
 இதையடுத்து, இந்த மாத துவக்கத்தில், உள்துறை அமைச்சகத்தில் நடந்த, 12 மாநிலங்களின், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உள்துறைச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காணாமல் போன, 16 இந்திய இளைஞர்கள், ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்திய இளைஞர்கள், பயங்கரவாத அமைப்பில் சேருவதைத் தடுக்க, அனைத்து மாநிலங்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment