Sunday, July 19, 2015

புலிகளைச் சொல்லியே கடந்த தேர்தல்களில் வென்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்!

Sunday, July 19, 2015
புலிகளைச் சொல்லியே கடந்த சில தேர்தல்களில் வென்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இம்முறை விடுதலைப் புலி உறுப்பினர்களாகவே இருந்தவர்கள் தேர்தலில் நேரடியாக இறங்குகிறார்கள் என்றவுடன், குப்பி கடிக்காமல் பிழைத்திருக்கும் போராளிகள் போராளிகளே அல்ல என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்கள்.
 
இதை புலிகளின் முடிவு தெரிந்த அந்த நாளிலிருந்தே மெல்ல மெல்ல இவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அழிவுக்கு வரும்வரை அவர்கள் பின்னால் இருந்து உசுப்பேற்றிக் கொண்டிருந்துவிட்டு, கடைசிநேரம் தங்களது போன்களை எல்லாம் மூடிவைத்துவிட்டுக் காணாமல் போனவர்களல்லவா!
 
நேற்றுவரை ஐந்தாம் கட்டப் போருக்குப் பரணி பாடியபடியும், ‘தேசியத் தலைவர் பார்ட் ரூ’ தான்தான் என்றும் சொல்லியபடி இருந்த ஒரு தமிழரசுக் கட்சி எம்.பி., திடீரென்று, குப்பி கடிக்காதோரைப் போராளிகளாகவே ஏற்க முடியாது என்கிறார்.
 
கடைசிவரைக்கும் பள்ளிக்கூடச் சிறுவர்களையெல்லாம் பிடித்துப் போர்க்களத்திற்குச் சாக அனுப்பிவிட்டு, தான் செஞ்சிலுவைச்சங்க வாகனத்தில் ஏறித் தப்பியோடி வந்தவரல்லவா!
இவர் இப்படி என்றால் கூட்டமைப்பின் தலைவரோ தேர்தல் தவிர்ந்த காலங்களில் வீடதலைப்புலிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தியே கருத்துத் தெரிவித்து வருபவர்.
இம்முறை, போராளிகளிடம் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கம் எதுவுமில்லை என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
 
புலிகளை வேறு யாரும் அழிக்கவில்லை@ அவர்கள் தங்களது கெடுமதியால் தாங்களாகவேதான் அழிந்துகொண்டார்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியே வந்திருக்கிறார் சம்பந்தன். பாராளுமன்ற உரையிலும் அதனை முழங்கினார், 2013-ல் வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலும் அதனை அழுத்திச் சொல்லியிருந்தார்.
 
2012 ஜனவரி மாதம் “தி ஐலண்ட்” பத்திரிகைக்கு தமிழரசுக் கட்சியின் மற்றொரு உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அளித்த செவ்வியிலும், இயக்கப் பெடியளைப் பற்றிக் கூறும்போது, “வேலைவெட்டியற்ற, மடமைக் கோபம் கொண்ட, நிதான புத்தியற்ற…” என்ற அடைமொழிகளையே பயன்படுத்தி அவர்களை இழிவுபடுத்தியிருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
விடுதலைப் புலிகள் இருந்தவரையில், எம்பிப் பதவிகளுக்காக அவர்களது வாசலில் இருந்த வாங்குகளில் காவல் இருந்ததும், அவர்களையே ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு சர்;வதேசத்திற்கு அறிவித்ததும், அவர்களையும் மக்களையும் அழிவுக்குத் தெரிந்தே தள்ளிவிட்டதையும் எப்படிப் பார்ப்பது?
 
இவர்களது அறுபது வருடகால பச்சையான சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியல்லவா இது! மக்கள் மீதான எந்த அக்கறையோ பொறுப்புணர்வோ அற்று, வெறுமனே பதவிகளைப் பிடிக்கும் அரசியலைத்தானே இவர்கள் செய்தார்கள்?
 
இன்றும் பெரும்பான்மையாக உள்ள அடிமட்ட தமிழ்மக்களின் வாழ்வு குறித்து எந்த அக்கறையுமற்ற, “தீர்வு வரட்டும் பாப்பம்” அரசியலைத்தானே செய்து பதவிகளைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள்!
தனியே இவர்களிடம் பேசிப்பார்த்தால் தெரியும், “தீர்வெங்கை வாறது? சிங்கள அரசாங்கம் ஒண்டையும் தராது” என்றுதானே சொல்லிக்கொள்கிறார்கள்! இது சந்தர்ப்பவாத அரசியல் மட்டும்தானா? நயவஞ்சகத்தன அரசியல் இல்லையா?
 
அவர்களுக்குத் தெரியும், சர்வதேசத்தினாலோ இந்த மாநாடுகளாலோ எல்லாம் தமிழ் மக்களுக்கான தீர்வு வரப்போவதில்லையென்று. தேர்தல் மேடையில் மட்டும் “உங்கள் வாக்குப்பலத்தைக் காட்டுங்கள்@ சர்வதேசம் வந்திறங்கும்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் மக்கள், இவர்களை வாய்பார்த்துக் காத்திருப்பதை விட்டால்தான் இனியிங்கு வாழ்வு!

No comments:

Post a Comment