Wednesday, July 1, 2015

குழு தலைவராக முன்னாள் ஜனாதிபதி: மகிந்த ராஜபக்ச!

Wednesday, July 01, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குழு தலைவராக எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இன்று கண்டியில் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் உரையாற்றுகையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் நேற்று நடத்திய கலந்துரையாடலின் பெறுபேறுகள் இன்று முன்னாள் ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
இன்றைய கலந்துரையாடல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேலாக இடம் பெற்றது.
இதேவேளை, ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று பிற்பகல் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக் கொள்வதற்கோ? அல்லது அறிவிப்பதற்கோ? ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் இணக்கம் காணப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சுதந்திர கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் செயற்பாடு அடுத்த வெள்ளிக்கிழமையே நிறைவுறுத்தப்படும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சி வேட்பாளர் குழுவில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள சிறப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி எந்தவித இணக்கப்பாட்டையும் வழங்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றால், உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு அமைய பிரதமர் நியமனம் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள சிறப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
எவ்வாறாயினும், நேற்றைய மற்றும் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை தொடர்பு கொள்ள எமது செய்தி பிரிவு பல முயற்சிகளை மேற்கொண்ட பொழுதிலும் அது பலனளிக்கவில்லை.
எனினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக பெயரிடும் செயற்பாடு மெதமுலனயில் நாளை இடம் பெறவுள்தாக முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் குழுவின்
உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாளை முற்பகல் 10.30க்கு வீரகெட்டிய மெதமுலனயிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஷேட அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவரது ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment