Thursday, July 2, 2015

அணுசக்தி ஒப்பந்தம் 7ம் தேதி கையெழுத்தாகிறது : இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தீவிரம்!

Thursday, July 02, 2015
வியன்னா: ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் வருகிற 7ம் தேதி கையெழுத்தாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்றே கையெழுத்தாகி இருக்க வேண்டிய அணுசக்தி ஒப்பந்தம், பேச்சுவார்த்தை முடியாததால் ஒருவாரம் தள்ளி போகும் நிலை ஏற்பட்டது. அணுசக்தியை ஈரான் நாசவேலைக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கருதிய வல்லரசு நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி கழகம் ஆகியவை அணுசக்தி பயன்பாட்டுக்கு தடை விதித்தது.
 
மின் உற்பத்தி உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு மட்டுமே அணுசக்தியை உபயோகப்படுத்தப்படும் என ஈரான் உறுதியளித்தது.இதையடுத்து, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தின. கடந்த 2 வருடங்களாக தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
 
அப்போது, ஒப்பந்தம் குறித்த வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஜூன் 30ம் தேதியன்று அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திட நாள் குறிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவடையாததால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆஸ்திரிய நாட்டு தலைநகர் வியன்னாவில் வல்லரசு நாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.வருகிற 7ம் தேதியன்று அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால், அன்றைய தினமே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.
 
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நேற்று பங்கேற்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையின் பலனாக அணுசக்தி ஒப்பந்தம் நல்ல கட்டத்தை எட்டியுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.  இதேபோல் ஈரான் அரசு மற்றும் சர்வதேச அணுசக்தி கழகம் ஆகியவை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளன.
 
ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், அணுசக்தி தொடர்பான விதிமுறைகளை சர்வதேச அணுசக்தி கழகம் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபடும். ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீங்கும்.ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

No comments:

Post a Comment