Sunday, July 19, 2015

ஆண்டு, 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் 'வீடியோ' ஆதாரம் வெளியீடு!

Sunday, July 19, 2015
சிட்னி:கடந்த ஆண்டு, 298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்பதற்கான, 'வீடியோ' ஆதாரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
மலேசியன் ஏர்லைன்சின், 'எம்.எச்.17' விமானம், சென்ற ஆண்டு, ஜூலை 17ல், ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் செல்லும் வழியில், உக்ரைன் அருகே, ஏவுகணை பீரங்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், 298 பேர் பலியாயினர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு, ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என்று, சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இதை ரஷ்யா மறுத்து வருகிறது.
 
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோரின் முதலாமாண்டு நினைவு தினம், நேற்று முன்தினம் நெதர்லாந்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆஸ்திரேலியாவின், 'சண்டே டெய்லி டெலிகிராப்' பத்திரிகை, விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட, 17 நிமிட வீடியோவை வெளியிட்டது.
 
அதில், போர் விமானம் என்று நினைத்து, பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதால், கிளர்ச்சியாளர்கள் பதற்றமாக இருப்பது பதிவாகியுள்ளது. மேலும், 'இது போர் விமானம் அல்ல; பயணிகள் விமானம்' என, ரஷ்ய மொழியில் பலர் கூறுவதும் தெளிவாக கேட்கிறது. இதையடுத்து,
 
தடயங்களை அழிக்கும் நோக்கில், விமானத்தின் கறுப்பு பெட்டியை கிளர்ச்சியாளர்கள் தேடுகின்றனர். அத்துடன், பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடி, ஆங்காங்கே இறந்து கிடக்கும் பயணிகளின் உடைமைகளை அள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது.
 
இது விபத்தே இல்லை; கொடூரமான அட்டூழியம்,'' என்று ஆஸி., பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த, ரஷ்ய அதிபர் புடின் துணை நிற்க வேண்டும் என, அவர் வலியுறுத்தியுள்ளார்.''உக்ரைனில், கிளர்ச்சியாளர்களின் முகாம் ஒன்றில் கிடைத்த இந்த வீடியோ ஆதாரம், விமான விபத்துக்கு, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என்பதை, தெளிவாக நிரூபிக்கிறது,'' என, ஆஸி., வெளியுறவு அமைச்சர் ஜூலை பிஷப் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, விமான விபத்து தொடர்பான புலனாய்வு அறிக்கையை, வரும் அக்டோபரில் வெளியிட உள்ளதாக, நெதர்லாந்து தெரிவித்து உள்ளது. வீடியோ ஆதாரம், உக்ரைன் கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.

No comments:

Post a Comment