Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் - ராக்கெட் நாயகனின் வாழ்க்கை பக்கங்கள் (1931 - 2015)!!

Tuesday, July 28, 2015
சென்னை:ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம், இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாகச் சிலாகிப்பார் கலாம். அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.
 
கல்லூரியில் உணவுச் செலவை குறைக்கச் சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின் ”இதைவிடப் பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்” என்ற வரிகள் உத்வேகப்படுத்தின.
 
விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கி ‘இந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தை’ என அழைக்கப்பட்டார்.
 
புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.
பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுது ”என்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே” எனக் கலாம் சொல்ல, ”வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!’ என மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான் சொன்னார்.
 
இந்தியா முழுக்க மாணவர்களைச் சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காகத் தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.
 
ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்குச் சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்தப் பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்காமல் தானே செலுத்தினார்.
 
இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.
 
தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில் ”என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்..
 
மறைந்த நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பலர் பல முறை, "ஏன் நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளவில்லை?" என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.
இதற்கு கலாம் அளித்த பதில் இதோ: திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக நான் குடும்பத்துக்கும் நேரமும் உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். அங்கே என் லட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. லட்சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் லட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதிவரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்.
இது தான் திருமணம் குறித்து தன்னிடம் கேட்பவர்களுக்கும், அவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய அவரது பெற்றோருக்கும் கலாம் கூறிய பதில்.
 
 
- பூ.கொ.சரவணன்

No comments:

Post a Comment