Tuesday, June 02, 2015
இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை அண்மையில் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சந்திக்கச் சென்றிருந்த போது, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தியா எமக்கு வழங்கிய சில உதவிகளை அவர்களினால் பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் அவ்வாறான உதவிகள் காரணமாகவே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது எனவும் பசில் ராஜபக்ஸ, முன்னாள் சிரேஸ்ட அமைச்சரிடம் கூறியுள்ளார்.
அந்த உதவிகளை மறந்து விட்டு செயற்பட்டதுதான் நாம் செய்த பெரிய பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு தம்மையே பலர் குற்றம் சுமத்திய போதிலும், இந்தியாவை பகைத்துக் கொண்டமை முக்கிய ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலவச அடிப்படையில் இந்தியா உதவிகளை வழங்கியதாகவும், சீனா பணத்தைப் பெற்றுக்கொண்டே உதவிகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தோல்விக்கான குற்றச்சாட்டை தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், உண்மை அதுவன்று எனவும், இன்று மஹிந்த வேண்டும் வேண்டும் என குரல் கொடுத்து வருவோரே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் இவர்களின் அனைத்து விளையாட்டுக்களும் நின்று விடும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மைத்திரியுடன் போடும் விளையாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் போட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பது எம்மில் சிலருக்கு புரியவில்லை எனவும், மைத்திரி சுதந்திரக் கட்சியின் தலைவர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்களை மறந்து விட்டு செயற்படுவது முட்டாள்தனமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் ஜனாதிபதி எனவும், மஹிந்தவை மீளக் கொண்டுவருவதாக தொிவிக்கும் சிலர் அவருக்கு பாதகத்தன்மைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ஆதரவாளர்கள் பசிலை சந்திக்க செல்லும் போது மைத்திரியுடன் இதனைச் செய்ய முடியாது எனவும், தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தம்மையும் தமது மனைவியையும் பழிவாங்கி வருவதாகவும், தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போதே தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஸ கூறியதாக கொழும்பு ஊடகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment