Tuesday, May 26, 2015
தடையுத்தரவு இருக்கும் தறுவாயில் கூட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் விளக்கேற்றி விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலையாகி வெளியே வந்தபோது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
தற்போது நாட்டிலுள்ள நல்லாட்சிக்கு அமையே நான் நீதிமன்றில் முன்னிலையானேன். ஜப்பான் சென்றிருந்ததால் உரிய நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை. எனினும், நல்லாட்சியிலுள்ள சட்டத்தை நாம் மதிக்கின்றோம்.
எனினும், தற்போது வடக்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் இருக்கிறது.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் 100 கணக்கான ஏக்கர் காணிகளை அழித்து வருகிறார். அவருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடக்கில் தடையுத்தரவை மீறி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் விளக்கேற்றி புலிகளை நினைவுகூர்ந்தனர். இதற்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே தற்போது தெற்கில் ஒரு சட்டமும், தெற்கில் ஒரு சட்டமும் காணப்படுகிறது. எனினும், இந்த அரசாங்கம் அனைத்து இடங்களிலும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரையில் பார்த்துக் கொண்டிருப்போம் என்று குறிப்பிட்டார்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றத்திற்காக ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
எனினும், ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. ஜப்பான் சென்றிருந்த நிலையில் நாடு திரும்பிய ஞானசார தேரர் கறுவாத்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதவான் பிணை வழங்கியதை அடுத்து ஞானசார தேரர் வெளியே வந்தார்.
No comments:
Post a Comment