Tuesday, April 21, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விசாரிக்கும் முடிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடுவே அமர்ந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்!

Tuesday, April 21, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் மவிசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபைக்கு நடுவே அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்கு அழைத்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவய நாணயக்கார, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைத்ததை வன்மையாக கண்டிப்பதாகவும் அப்படி நடக்காது என்பதற்கு அரசாங்கம் நிரந்தர உத்தரவாதத்தை வழங்க வேண்டியது அவசியம் எனவும் கூறினர்.
 
விமல் வீரவன்ஸவும் வாசுதேவ நாணயக்காரவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்தனர்.பிரதமர் நயவஞ்சக வேலை செய்வதாக வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.
பிரதமரின் தேவைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
 
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
 
லஞ்ச ஆணைக்குழுவின் பணிகளில் அரசாங்கம் தலையிடாது. அது ஆணைக்குழுவின் சுதந்திரமான தீர்மானம்.சாட்சியம் ஒன்றை பெறவே முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் என்ன பிரச்சினை?. பிரச்சினைகள் இருந்தால், ராஜபக்ச அவர்களின் சட்டத்தரணிகள் உரிய நடவடிக்கையை எடுக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டார்.
 
இதையடுத்து மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஆணைக்குழுக்கு கொண்டு செல்லக் கூடாது என கோஷமிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்து கொண்டனர்.விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, சஜின் வாஸ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, உதித்த லொக்குபண்டார, பந்துல குணவர்தன உட்பட சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
கூட்டத்தை ஒத்திவைத்து, சபாநாயகர் செங்கோலை அப்புறப்படுத்திய பின்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு நடுவில் அமர்ந்திருந்தனர்.

No comments:

Post a Comment