Tuesday, April 21, 2015

வெளிநாட்டு வங்கிகளில் தனக்கும், தனது மனைவி மற்றும் மகன்களுக்கு சட்டவிரோத அல்லது இரகசிய வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ!

Tuesday, April 21, 2015
வெளிநாட்டு வங்கிகளில் தனக்கும், தனது மனைவி மற்றும் மகன்களுக்கு சட்டவிரோத அல்லது இரகசிய வங்கிக் கணக்குகள் எதுவும் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வெளிநாடுகளிலுள்ள வங்கிகளில் பணம் வைப்பிலிருப்பதாக, ஆளும் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தன்னிலை விளக்க அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றபோதலும், அது அடிப்படை ஆதரமற்றவையாக இருக்கிறது என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உதாரணத்திற்கு, தனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு துபாயிலுள்ள வங்கியில் 1,064 மில்லியன் டொலர் பெறுமதியான பணம் வைப்பிலிருப்பதாக அமைச்சர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்திருந்தபோதிலும், அதற்கான ஆதாரங்கள் அவரால் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
 
இதற்கு மேலதிகமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் புலனாய்வு பிரிவின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக செய்தியொன்று வெளியாகியிருந்த நிலையில், சீசல்ஸ் தீவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கண்டுப்பிடிப்பதற்காக விசேட குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்து. இவை அனைத்தும் எவ்வித சாட்சியமும் அற்ற நிலையில் பரப்பப்படும் போலி பிரச்சாரம் என மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இரகசிய வங்கிக் கணக்குகள் விஷயத்தில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருகின்றபோதிலும், ஆதாரங்களுடன் அவை நிரூபிக்கப்படவில்லை என்பதை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, உண்மையிலேயே இவ்வாறான கணக்குகள் இருந்திருந்தால் அவற்றை ஆதாரபூர்வமாக வெளியிட இவ்வளவு காலம் எடுத்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
 
தனது மகன்கள் பயன்படுத்துவதற்காக தனி ஹெலிகொப்டர்கள் கொண்டுவரப்பட்டதாகவும், அவர்களுக்கு அமெரிக்காவில் மாளிகைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் முன்னர் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் போன்றே, தற்போது நிதி மோசடிகள் தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த போலிப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்

No comments:

Post a Comment