Friday, March 27, 2015
நாட்டில் புலிகளுக்கு ஆதரவான பிரிவினைவாத சக்திகள்
தொடர்ந்தும் இயங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு
அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.என்.பி. கட்சி, மஹஜன ஐக்கிய முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமராக்குமாறு கோரி கூட்டங்களை நடத்தி வருகின்றது.
இந்த கூட்டத் தொடரின் மற்றுமொரு கூட்டம் நேற்றைய தினம் இரத்தினபுரியில் நடைபெற்றது. நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக செயற்பட மக்கள் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் புலிகளுக்கு ஆதரவான தேசவிரோத சக்திகளின் கரம் வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போராடுவதற்கு தேவையான தைரியம் எம்மிடம் உள்ளது என்பதனை சூழ்ச்சிகாரர்களுக்கு புரியச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை, அபிவிருத்தி அடைந்த நாடுகள் நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடும் மழையையும் கருத்திற் கொள்ளாது இரத்தினபுரி கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment