Sunday, January 4, 2015

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி உறுதி கட்சி தாவியோர் மூக்குடைபடுவர்!

Sunday, January 04, 2015
இலங்கை::எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவது என்பது உறுதியாகியுள்ளது. நாடெங்கிலும் அவருக்கு ஆதரவாக மக்கள் அணிதிரண்டு வருவது இதனை நன்கு புலப்படுத்தியுள்ளது.
 
வடக்கு, கிழக்கு மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் உட்பட சிங்கள மக்களில் பெரும்பாலானோரும் ஜனாதிபதியின் கடந்த பத்து வருட கால நல்லாட்சி தொடர மீண்டும் தமது அங்கீகாரத்தை வழங்கத் தயாராகியுள்ளனர். ஜனாதிபதியின் இந்த வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதை அவர் தேர்தல் பிரசாரங்களுக்காக செல்லுமிடங்களில் மக்கள் அலை அலையாகத் திரண்டு உறுதி செய்து வருவதன் மூலம் உணர முடிகின்றது.
 
கடந்த வாரம் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் 09ஆம் திகதி தன்னை மீண்டும் புதிய ஜனாதிபதியாகச் சந்திக்க இப்போதே அழைப்பு விடுப்பதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார். இது மக்களுடன் இணைந்து அவரது மன உறுதியையும், நம்பிக்கையையும் காட்டுகின்றது.
 
திடீரென முளைத்த பொது எதிரணி வேட்பாளரை அவர் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை என்பதை அவருடன் நடத்திய கலந்துரையாடல் மூலமாக தெளிவாக உணர முடிந்தது. கடந்த பத்து வருடங்களாக தன்னுடன் ஒன்றாக கூட இருந்தவரின் தகுதி என்ன என்பதை அவர் நன்கு உணர்ந்திருப்பதனாலேயே அவர் மைத்திரிபால சிறிசேன குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.
 
உண்மையில் இத்தேர்தலில் சந்திரிகா அம்மையாரே ஜனாதிபதியை எதிர்த்துப் போட்டியிடுகின்றார். அவர் ஜனாதிபதியை பழி வாங்கும் முகமாக மேலைத்தேய நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டை அடகு வைத்து இச்சூதாட்டத்தில் இறங்கியுள்ளார். அடுத்து ரணில் விக்கிரமசிங்க அவர்கள். அவர் தேர்தலில் தொடர் தோல்விகளைச் சந்தித்த ஒருவர்.
 
அமைச்சர் நிமல் சிறிபால சில்வா தெரிவித்தது போன்று அவர் பரீட்சையில் தோற்றுப் போன ஒருவர் எப்படியாவது தேறிவிட இன்னொருவரை வைத்துக் குதிரையோடுவது போலவே மைத்திரிபாலவை களமிறக்கச் சம்மதித்துள்ளார்.

ஆனால் அது தவறான தெரிவு என்பதை அவர் எதிர்வரும் 09ஆம் திகதி உணர்வார். குதிரையோடுவதற்கு பரீட்சை எழுதத் தகுதி வாய்ந்த ஒருவரையே தெரிவு செய்ய வேண்டும். உயர்தர பரீட்சை எழுத பாலர் வகுப்பில் கல்வி பயிலும் ஒருவரைத் தெரிவு செய்தது போலவே ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபாலவை போட்டியிட வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த தடவையும், இப்படித்தான் அரசியலில் அ, ஆ தெரியாத சரத் பொன்சேகாவை நியமித்து தோல்வி கண்டார். அது கட்சியின் நெருக்குதலால் ஒப்புக் கொண்ட விடயம். இம்முறை சந்திரிகா, மங்கள, சஜித் ஆகியோரின் தெரிவாக மைத்திரியை களமிறக்கியுள்ளார்.
 
தாம் யாரைக் களமிறக்கினாலும் அவர்களை மக்கள் வாயை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்பதாகவே சந்திரிகா, மங்கள, ரணில் கூட்டணியின் எண்ணமாக உள்ளது. மக்களிடம் கருத்தறியாமல் மலைபோன்றதொரு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் யாரைப் போட்டியிட வைக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாத இக்கூட்டணி நாளை வெற்றி பெற்று நாட்டை எப்படி ஆளும் என்பதாக ஆரம்பத்திலிருந்தே மக்கள் மனங்களில் கேள்வி எழுந்திருந்தது.
 
அது இப்போது இவர்கள் நடத்திவரும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாததும், முன்னுக்குப் பின் முரணானதுமான தேர்தல் பிரசார மேடைப் பேச்சுக்கள் மூலம் உறுதியாகிவிட்டது. மக்கள் ஆட்சியை மட்டுமே கைப்பற்றும் இவர்களது கபடத்தனமான சூழ்ச்சியை அறிந்துவிட்டனர்.
 
இதனால் இவர்களை நம்பிக் கட்சி தாவியோர் இன்று நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களாகத் தவித்து நிற்கின்றனர். மைத்திரி வென்றுவிடுவாரோ எனும் நப்பாசையில் சமூக நன்மைக்காக எனக் கூறி கட்சி தாவிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் பலவும் தமது மக்கள் ஜனாதிபதி மஹிந்தவுடன் நிற்பதனால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தன்னுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் பணியாற்றவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இப்போது அவர்கள் பிரிந்து சென்றமை தனக்கு ஒரு விடயமே இல்லை எனவும் கூறியிருக்கிறார்.
 
உண்மையில் ஜனாதிபதியின் இக்கூற்றில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. தனக்கு எதிராக பிரசாரம் செய்துவிட்டு வந்தவர்களையும் அவர்களது சமூகம் நன்மையடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அன்று ஜனாதிபதி அரவணைத்தார். அவர் நினைத்திருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் இன்றுவரை எதிர்க்கட்சியிலேயே இருந்திருக்கும்.
 
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களை விடவும் முஸ்லிம் மக்கள் பற்றி ஜனாதிபதி அதிகமாகச் சிந்தித்தார். அரசாங்கத்துடன் அவர்களையும் இணைத்துக் கொண்டால் அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கும் தனது பணியை ஆற்ற முடியும் என ஜனாதிபதி சிந்தித்தமையினாலேயே காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை காலமும் அமைச்சுப் பதவிகளில் சுக போகங்களை அனுபவிக்கவும் முடிந்தது.
 
அத்துடன் மக்களுக்கு உதவிகளையும் செய்ய முடிந்தது. இதனை இன்று பச்சோந்திகளாகச் செயற்படும் முஸ்லிம் தலைவர்கள் மறந்தாலும் அம்மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் ஜனாதிபதியுடன் இணைந்து நின்று உண்மையாகவே தமக்காகக் குரல் கொடுக்கும் தலைவர்களான அதாவுல்லா, ஹிஸ்புல்லா, அலவி மெளலானா, அஸ்வர், மில்பர் கபூர், கே.ஏ.பாயிஸ் ஆகியோருடன் மக்கள் கரம் கோர்த்து ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்காக பாடுபட்டுழைக்கின்றனர். இதன் மூலமாக எதிர்வரும் 09ஆம் திகதி ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிடும். அதன் பின்னர் இன்று பிரிந்து சென்று எதிராகச் செயற்படுவோர் மீண்டும் வந்து சமூகத்திற்காக எனக் கைகளைப் பிசைந்து அமைச்சுப் பதவிகளுக்காக ஒட்டிக் கொள்வர்.
 
ஆனால் இம்முறை இந்தப் பருப்பு வேகாது என்பதாக ஜனாதிபதி ஓர் அதிரடி அறிவிப்பை விடுத்திருக்கிறார். அதாவது துரோகம் செய்து பிரிந்து சென்ற எவரையும் மீண்டும் இணைத்துக் கொள்வதில்லை என அவர் திடமாகத் தெரிவித்திருக்கிறார். இதுவும் அவரது நிச்சயமாக வெற்றிபெறும் உறுதியை புலப்படுத்தி நிற்கிறது.
 
எனவே மக்கள் தேர்தல் தினமான எதிர்வரும் 08ஆம் திகதி காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்குகளை அளித்துவிட வேண்டும். தமக்கும், தமது தாய் நாட்டுக்கும் பாதுகாப்பிற்கும், அபிவிருத்திக்கும் மிகவும் பொருத்தமான தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும்.

No comments:

Post a Comment