Thursday, January 29, 2015

காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் புறக்கணிப்பு - தனிக்கட்சி தொடங்க தீவிர ஆலோசனை?

Thursday, January 29, 2015
சென்னை::காங்கிரஸ் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியுள்ள நிலையில், ப.சிதம்பரமும் காங்கிரஸில் புறக்கணிக்கப்படுவதால் தனது ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஞானதேசிகன் விலக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் பெயரே அடிபட்டது. ஆனால் திடீரென ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக்கப்பட்டார்.

இந்த நிலயில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காமராஜர் திட்டங்களை மட்டும் பேசி பயனில்லை. புதிய திட்டத்துடன் மக்களை சந்திக்க வேண்டும் என்றார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரத்தின் பேச்சை இளங்கோவன் கடுமையாக கண்டித்துப் பேசினார்.

மேலும் மேலிடத்தில் இளங்கோவன் பற்றி சிதம்பரம் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் புகாரை மேலிடம் கண்டுகொள்ளவில்லை. மாறாக சிதம்பரத்தை புறக்கணிக்க ஆரம்பித்தது. இதனால், சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் மோதல் அதிகரித்தது.

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கடந்த வாரம் கார்த்தி சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, புதிய கட்சி அல்லது பழைய அமைப்பான ஜனநாயக பேரவையை மீண்டும் ஆரம்பிப்பது நல்லது என்று பேசப்பட்டுள்ளது.

இது குறித்து சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது மேலிடத்துக்கும் கூறப்பட்டுள்ளது.
 
எனவே எந்த நேரத்திலும் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

No comments:

Post a Comment