Tuesday, January 27, 2015

இலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும்: வை.கே.சிங்ஹா!

Tuesday, January 27, 2015
இலங்கை::இலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயம் அவருடைய முதலாவது வெளிநாட்டு விஜயமாக அமையவுள்ளது.
 
அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூடியவிரைவில் இலங்கை வரவுள்ளார். இந்த அரச தலைவர்களின் விஜயங்களின் போது எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
இந்தியாவின் 66வது குடியரசு தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 
இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் நடத்தப்பட்ட தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா தயாராக இருக்கின்றது.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கடந்த வருடங்களில் மேலும் பலப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வர்த்தகம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்திய முதலீடுகள் அதிகரித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடையும்.
 
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் அபிவிருத்தியில் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.
 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வெறுமனே பூகோளரீதியான தொடர்புகள் மாத்திரம் இல்லை. கலாசார, மதரீதியான நெருக்கங்கள் காணப்படுகின்றன.
 
குடும்ப ரீதியான தொடர்புகள் இரு நாட்டு மக்களுக்கு மிடையில் உள்ளன. இந்த உறவுகள் மற்றும் தொடர்புகள் மேலும் பலப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment