Monday, January 5, 2015

ஜெயலலிதா, சுப்ரமணிய சாமி, அன்பழகனின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு!!

Monday, January 05, 2015
சென்னை::ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தங்களை இணைத்துக் கொள்ள திமுக தரப்பில் கோரிக்கை மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், விசாரணை நீதிமன்றத்துடன் க. அன்பழகனின் வேலை முடிந்துவிட்டதாகவும் நீதிபதி குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது அரசுத்தரப்பு வழக்குரைஞருக்கு உதவியாக 3-ஆவது பிரதிவாதியாக ஆஜராக அனுமதிக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

சுப்ரமணிய சாமி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு

மேல்முறையீட்டு வழக்கில், தன்னையும் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ளுமாறு பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி நேரில் ஆஜராகி வாதத்தை முன் வைத்தார்.

தாம் புகார் தாரர் என்பதால் தன்னை வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜெயலலிதா ஜாமீன் மனுவுக்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதால் தன்னை வழக்கில் சேர்ப்பது அவசியம் என்றும் சுப்ரமணிய சுவாமி வாதாடினார்.
ஆனால், இதனை ஏற்க நீதிபதி குமாரசாமி மறுத்துவிட்டார். ஜாமீன் மனுவை மட்டுமே காரணம் காட்டி வழக்கில் உங்களை வழக்கில் சேர்த்தக் கொள்ள முடியாது என்று கூறினார். வேண்டுமானால் சுப்ரமணிய சுவாமி அரசு தரப்புக்கு உதவியாக இருக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.

ழக்கில் சேர்த்துக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரமணியசுவாமிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா கோரிக்கையை நிராகரித்தார்

சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 12ம்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுவதும் படித்து பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
 
வழக்கை ஒத்திவைக்க கால அவகாசம் வழங்க முடியாது. விசாரணையை தொடருங்கள் என்று கூறினார்.

No comments:

Post a Comment