Wednesday, January 7, 2015

இலங்கையில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 10 நபர்களை கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தல்!

Wednesday, January 07, 2015
இலங்கை::
கடந்த மூன்று தசாப்த காலங்களில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அதிகளவாள ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு போதை பொருளை கடத்தும் பிரதான நாடாக பாகிஸ்தான் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட 10 நபர்களை கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
பொலிஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார்.
 
அவர் தொடர்ந்து கூறுகையில்:-
 
2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அதிகளவான ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டில் 350 கிலோகிராமும் 2014ஆம் ஆண்டு 312 கிலோகிராமுமாக மொத்தம் 662 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இந்த பாரியளவான ஹெரோயன்; போதைபொருள் கைப்பற்றப்பட்டமைக்கு காரணம் இலங்கைக்கு போதைபொருள் கடத்தும் பிரதான நாடாக பாகிஸ்தான் இருப்பதுடன் அங்கிருந்து கொள்கலன்களில் இந்த போதைபொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டமையாகும்.
 
இந்த பாரியளவான போதை பொருட்களை கடத்திய சந்தேக நபர்கள் 2013ஆம் ஆண்டு 23,665 பேரும் 2014ஆம் ஆண்டு 23,106 பேரும் மொத்தமாக 46,771 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக 46,708 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
 
அத்துடன் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி வரை ஹெரோய்ன் போதைபொருள் தொடர்பான வழக்குகள் 92,742 பதிவாகியதுடன் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,950 ஆகும்.
 
அத்துடன் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு கஞ்சா போதைபொருள் தொடர்புடைய 85,591 வழக்குகள்; பதிவானதுடன் 85,494 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, இலங்கையில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுப்பட்ட 10 நபர்களை கைது செய்வதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அஜித் ரோஹண கூறினார்.

No comments:

Post a Comment