Tuesday, December 2, 2014

சர்வதேச கடற்பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நாடுகளும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல்!

Tuesday, December 02, 2014
இலங்கை
 சர்வதேச கடற்பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நாடுகளும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் தெரிவித்தார். காலி, லைட் ஹவுஸ் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான சர்வதேச கடற் பாதுகாப்பு மாநாட்டில், 'சமுத்திர நலனுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவின் முக்கியத்துவம்' என்ற தொனிப்பொருளில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
'இலங்கையில் முதல் தடவையாக கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச கடற்பாதுகாப்பு மாநாட்டில் 11 நாடுகள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தன. எனினும், இன்று அந்த நிலை மாறி 36 நாடுகள் கலந்துகொண்டுள்ளன. இதனூடாக இலங்கை தமது இலக்கினை அடைந்துள்ளது. சர்வதேச நாடுகளின் பாதுகாப்புக்கு சர்வதேச கடற்பிராந்தியங்களின் பாதுகாப்பு அவசியமாகும். இதற்கு அனைத்து நாடுகளும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன்றைய நாட்களில் சர்வதேச கடற்பிராந்தியங்களில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
 
போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள் அதிகரித்துள்ளதுடன் சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களின் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. நாடுகளின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கிய காரணமாக காணப்படும் நிலையில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் கடலினூடான வாணிபம் போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால், இன்று அதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே கடற்பிராந்தியத்தில் காணப்படும் குற்றச்செயல்களை ஒழித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும்.
 
எனவே, சர்வதேச நாடுகள் ஒன்றிணைத்து தமக்குள் ஒத்துழைப்புகளை வழங்குவதுடன் தமது அனுபவங்கள், அறிவு என்பவற்யை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவதன் மூலம் சர்வதேச கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என அஜித் டோவல் மேலும் கூறினார்.
 
இந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க உட்பட சர்வதேச நாடுகளின் கடற்படை பிரதானிகளும் கலந்து கொண்டனர். இதேவேளை, இந்த கடற்பாதுகாப்பு மாநாடு இன்று மாலை5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

No comments:

Post a Comment