Thursday, December 4, 2014

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமான தலைவர் அன்றும், இன்றும், என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே: சர்வமதத் தலைவர்கள்!

Thursday, December 04, 2014
இலங்கை::நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமான தலைவர் அன்றும், இன்றும், என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. எனவே சர்வதேச சதிக்குள் சிக்காமல் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருப்பதாக சர்வமதத் தலைவர்கள் தெரிவித்தனர்.
 
நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்லும் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒன்று திரண்டிருப்பவர்கள், சர்வதேச சதியுடன் கூடிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தேசிய சமாதானத்துக்கான சர்வமதக் குழுவின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

இக்குழுவின் தலைவர் கும்புறுகமுவே வஜ்ர தேரர், இணைத் தலைவர்களான வணபிதா சரத் ஹெட்டியாராச்சி, கலாநிதி அஷ்- ஷெய்க் ஹசன் மெளலானா, பிரம்மஸ்ரீ ஆர்.பாபுசர்மா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்ட நாட்டில் மீண்டும் ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தவே சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சுமத்தினர்.
 
ஜனாதிபதியே நம்பிக்கை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனநாயகத்தை மதித்து, அனைத்து இன மக்களையும் சமமாக மதித்து நடக்கும் சிறந்ததொரு தலைவர். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அதனை நிவர்த்திசெய்தவர். அவர் ஒருபோதும் மக்களை ஏமாற்றியவர் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தவிர வேறு எவர் மீதும் நம்பிக்கை வைக்கமுடியாது என இங்கு கருத்துத் தெரிவித்த கும்புறுகமுவே வஜ்ர தேரர் கூறினார்.
 
ஜனாதிபதிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளவர்களின் பின்னணியைப் பார்த்தால் சதித்திட்டத்துடன் கூடிய வெளிநாட்டு சக்தியொன்று உள்ள தெரிகிறது. நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் சூழலை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது.
இதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அமைதியை விரும்பும் சர்வமதத் தலைவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவையும் ஆசியையும் வழங்கத் தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
மறக்கப்படும் கடந்தகாலம்
 
குண்டுவெடிப்புக்கள், வீதித் தடைகள், சோதனைச் சாவடிகள் என்ற நிலை மாறி நாட்டில் அமைதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதனை யார் ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதை நாட்டு மக்கள் எவரும் மறந்துவிடக் கூடாது என இங்கு கருத்துத் தெரிவித்த வண பிதா சரத் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
 
கடந்த காலத்தை மறந்து செயற்படுவது நல்லதல்ல. ஜனாதிபதிக்கு எதிராக களமிறங்கியிருக்கும் குழுவினர் நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, அரசியலமைப்பு போன்ற விடயங்கள் மக்களுக்குப் பிரச்சினையில்லை. சில தரப்பினருக்கு மாத்திரமே இது பிரச்சினையாக உள்ளது.
எதிர்த்தரப்புக்குச் சென்றவர்கள் நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டு செல்லவில்லை.
 
தனிப்பட்ட வரப்பிரசாதங்களுக்கு ஆசைப்பட்டே சென்றுள்ளனர். இவர்களின் பின்னணியில் சர்வதேச சதியொன்று செயற்பட்டுள்ளது என்றார். இதனை முறியடித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மூன்றாவது தடவையும் வெற்றிபெறச் செய்வதற்கு சர்வமதத் தலைவர்கள் தீர்மானித்திருப் பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆட்சியில் நாவலருக்கு விழா
 
புலிகளின் காலத்தில் நாவலர் சிலைகள் மாயமாய் போயிருந்தன. இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று நாவலர் சிலைகள் திறக்கப்பட்டிருப்பதுடன், நாவலருக்கு நாடு பூராகவும் விழா எடுக்கப்படும் சூழல் தோன்றியிருப்பதாக பிரம்மஸ்ரீ ஆர்.பாபுசர்மா கூறினார்.
 
பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானாலும் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லப் போவதில்லையெனக் கூறியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உண்மையில் அவர் ஒருபோதும் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லப்போவதில்லை. ஏனெனில் அவர் ஜனாதிபதியாவதே ஒரு பகற்கனவு.
 
நாட்டில் அமைதியை ஏற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனேயே நாட்டிலுள்ள சகல இந்து மக்களும் உள்ளனர். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எதிரணி வேட்பாளர் உள்ளது தரப்பினருக்கு இல்லை. தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் தேவையாக உள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தவிர இரண்டாவது வார்த்தைக்கு இடமில்லை என்றார்.
 
ஜனாதிபதியே பொருத்தமானவர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே நாட்டை நிர்வகிப்பதற்குப் பொருத்தமானவர் என்பதை உலகத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இதனை நாட்டு மக்களும் உணர்ந்துகொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த கலாநிதி அஷ்-ஷெய்க் ஹசன் மெளலானா கூறினார்.நாட்டிலுள்ள சகல மக்களும் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை அனுபவிக் கின்றனர்.
 
அண்மையில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டில் இலங்கையின் நிர்வாகத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே பொருத்தமானவர் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். நாட்டின் சமாதானத்தையோ அபிவிருத்தியையோ அனுபவிக்காத அவரே அவ்வாறு கூறும்போது நாட்டு மக்களும் அதனை உணர்ந்திருப்பார்கள்.
 
ஜனாதிபதிக்கு எதிராக ஒன்று திரண்டிருப்பவர்கள் வெளிநாட்டு சக்திகளின் சதி வலைக்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் தமது சொந்த நலன்களிலேயே அக்கறை காட்டுகின்றனர். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தியவர்.
 
அது மட்டுமன்றி அரபு நாடுகளுக்கு பக்கபலமாக செயற்படும் நாட்டுத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகிறார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். ஜனாதிபதியான பின்னர் பலஸ்தீனத்துக்கு அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஐ.நாவில் வலியுறுத்தியவர்.
 
அரபு நாடுகளுடன் நட்புடன் செயற்படுவதாலேயே பல அரபு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக சர்வதேச அரங்கில் செயற்படுகின்றன. இவ்வாறானதொரு தலைவருக்கே நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment