Sunday, December 28, 2014
இலங்கை::ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து இன்றுவரை அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகள் சிலரும் கட்சி மாறி வருவதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக ஆளுங் கூட்டணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்தில் இதுவரை காலமும் பங்காளிகளாக இருந்துவந்த இதர சில கட்சிகளிலிருந்தும் வெளியேறும் அரசியல்வாதிகளும் தமது சுயநலத்திற்காக சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோராகவே மக்களால் நோக்கப்படுகின்றனர். இவர்கள் இதுவரை காலமும் தாம் பின்பற்றி வந்த கொள்கைகளை ஒரே நாளில் தூக்கி எறியும் நம்பிக்கைத் துரோகிகளாகவே மக்களால் பார்க்கப்படுகின்றனர்.
இலங்கை::ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து இன்றுவரை அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகள் சிலரும் கட்சி மாறி வருவதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக ஆளுங் கூட்டணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்தில் இதுவரை காலமும் பங்காளிகளாக இருந்துவந்த இதர சில கட்சிகளிலிருந்தும் வெளியேறும் அரசியல்வாதிகளும் தமது சுயநலத்திற்காக சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவோராகவே மக்களால் நோக்கப்படுகின்றனர். இவர்கள் இதுவரை காலமும் தாம் பின்பற்றி வந்த கொள்கைகளை ஒரே நாளில் தூக்கி எறியும் நம்பிக்கைத் துரோகிகளாகவே மக்களால் பார்க்கப்படுகின்றனர்.
தமது சமூகத்திற்காகவும், தாம் சார்ந்த மக்களுக்காகவுமே தாம் இவ்வாறு செய்கிறோம் என இவர்கள் எவ்வளவுதான் கூறினாலும், அறிக்கைகள் விட்டாலும் அவர்களது கருத்துக்களை முன்னொரு காலம் போன்று நம்ப மக்கள் தயாரில்லை. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தம்மை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட முறையில் வலுப்படுத்தவே ஆளுங் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வோர் முயற்சிக்கின்றனர் என்பது வெளிச்சம். நேற்று வரை அரசாங்கத்தின் சகல விதமான சொகுசு வளங்களையும் பயன்படுத்திவிட்டு இன்று அதே அரசாங்கம் நடந்து கொள்வது எமக்குப் பிடிக்கவில்லை என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? இது சிறுபிள்ளைத் தனமான கதை. கடந்த பத்து வருடங்களாக அந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்துவிட்டு இவ்வாறு கூறுவது முறையானதா? தமது சமூகத்திற்கு எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தைக் காரணமாகக் கூறி அதனால்தான் நாம் அரசிலிருந்து விலகுகிறோம் எனக் கூறுவது சிறு குழந்தைகளுக்கு அம்புலி மாமா கதை கூறுவது போலாகும்.
அவ்வாறு இவர்கள் உண்மையிலேயே சமூகப் பற்று இருப்பவர்களாக இருந்திருந்தால் இத்தனை காலமும் ஏன் அதே அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள் எனும் கேள்வியும் எழுமல்லவா? அதற்கும் ஏதாவது பாட்டி வடை சுட்ட கதை போன்றதொரு கதை வைத்திருப்பார்கள். ஆனால் மக்கள் இவற்றை நம்ப இப்போது தயாரில்லை. தமது சமூகத்திற்கு துரோகம் இழைக்கப்படுகிறது எனக் கருதி அன்றே அடுத்த கணமே பதவிகளைத் துறந்து இவர்கள் வெளியேறியிருந்தால் இவர்களை மக்கள் ஏற்றிருப்பார்கள். வீரர்கள், போராளிகள் எனக் கொண்டாடியிருப்பார்கள்.ஆனால் அன்று சலுகைகளுக்காகவும், வசதி வாய்ப்புக்களுக்காகவும் சமூகத்தை மறந்து அரசாங்கத்துடன் இருந்துவிட்டு இன்று பொது எதிரணி ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ எனும் நப்பாசையில் குத்துக்கரணம் அடித்து ஓடிச் செல்வது எவ்வகையில் நியாயமானது?
நாளை பொது எதிரணி தோல்வியைத் தழுவும்போது ஓடிச் சென்றவர்கள் எங்கே போய்த் தமது முகங்களை வைப்பார்கள்? அப்போது இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார். உங்களுக்கு நிச்சயம் மீண்டும் உதவிக்கரம் நீட்டுவார். இதனை அரசியலில் பல தடவைகள் பல்டி அடித்தவர்கள் நன்கு உணர்வார்கள்.
உண்மையில் தேர்தல்கள் வரும்போதுதான் அரசியல்வாதிகள் பலருக்கும் சமூகம் தொடர்பான சிந்தனை வருகிறது. இந்நிலையை இம்முறை நாட்டு மக்கள் மாற்றியமைக்க வேண்டும். பொது எதிரணி வேட்பாளருக்கு கிடைக்கும் படுதோல்வி ஆட்சியிலிருந்து அதிகாரங்களை அனுபவித்துவிட்டு கட்சி மாறுவோருக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். எதிரணியிலிருந்து ஆளுங் கூட்டணிக்கு வருவோரை நாம் வரவேற்க வேண்டும். நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இரகசிய ஒப்பந்தத்தை செய்த மறுகணமே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறி ஆளுங் கூட்டணியில் இணைந்தார். அதுதான் உண்மையான கட்சித் தாவல். அதில் ஓர் அர்த்தம் உள்ளது, நியாயமுள்ளது. எனக்கு கட்சியை விடவும் தாய் நாடே முக்கியம் என அவர் கூறியதைக் கேட்டு நாட்டு மக்கள் பூரிப்படைந்தனர்.
எனவே சுயநல நோக்குடன் கட்சி தாவுவதை பெருமையாக நினைக்கும் சிலர் அதற்காக தயவு செய்து சமூகத்தை இழுக்காதீர்கள். உங்களது கறை படியும் அரசியலுக்குள் சமூகத்தின் புனிதத் தன்மைகளை மழுங்கடிக்காதீர்கள். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சகலவிதமான கட்சித் தாவல் செய்தோரையும் கவனித்துக் கொள்வார்கள். அதன் பின்னர் மீண்டும் கட்சித் தாவலை மேற்கொள்ளத் தயாராக இருங்கள். நாட்டு மக்கள் இப்போதும் அரசியல்வாதிகள் கூறும் பொய்களை நம்பி வாக்களிக்கும் நிலையில் இல்லை. அதனால் இனியும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதே சிறந்தது.
இதேவேளை பொழுது விடிந்தால் எந்த அரசியல்வாதி எந்தப் பக்கம் சென்றுள்ளார் என்பதை அறிவதற்காக நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் ஊடகங்களை நாடி வருகின்றனர். ஆனால் பல ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளையே வெளியிட்டு வருகின்றன. அதிலும் சில ஊடகங்கள் தமது பிரசாரத்திற்காக பரபரப்புச் செய்திகளாக முந்திக் கொண்டு பொய்யான தகவல்களையும் வழங்கி வருகின்றன. இதனால் ஊடகங்கள் மீதான மக்களது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலைமையையும் உணர முடிகிறது. ஊடகங்கள் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வது அவசியம் என்பதை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓர் ஊடகவியலாளனுக்கு எந்தவொரு கட்சிச் சார்பும் இருக்கக்கூடாது அவனே உண்மையான ஊடகவியலாளன் எனத் தன்னைக் கூறிக் கொள்வதற்குத் தகுதியானவன். ஆனாலோ எமது நாட்டில் சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்காகவும், தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் எனும் கொள்கையே காணப்படுகிறது.
அதிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எனப் பிரிவுகளும், அமைப்புக்களும் வேறு. இந்நிலையை மறுப்பதற்கில்லை. இது யுத்த காலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது. பின்னர் இந்நிலை சிறிது தளர்ந்திருந்தது. ஆனால் இன்று அதே நிலை முன்னரை விடவும் உக்கிரம் அடைந்துள்ளதைக் காண முடிகிறது. முதலில் இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். ஊடகம் என்பது மக்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டுமே தவிரவும் இன, மத, மொழி பிரதேச ரீதியாக ஒருபோதும் செயற்படக் கூடாது. ஊடகவியலாளர்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும். இதில் வெற்றி கண்டாலே நாட்டிலுள்ள இனப்பிரச்சினையில் தொண்ணூறு சதவீதமான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
இதேவேளை சிலர் தமது முக நூல்களை ஏதோ ஊடக வலையமைப்பாக நினைத்து அதில் தமது கற்பனையில் சில அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் சாடி வருகின்றனர். உண்மையில் முகநூல் என்பது ஒரு சமூக வலையமைப்பு. அதில் வருந்தியழைத்து ஓர் இலட்சம் நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டு தமது அரசியல் விருப்பு வெறுப்புக்களையும், தனிப்பட்ட தமது பகைக்காக காழ்ப்புணர்வுகளையும் வெளியிடுவது முறையல்ல. முகநூல் ஏற்படுத்தப்பட்டமைக்கான நோக்கத்தை இத்தகைய சிலர் புரிந்து கொள்ளாதிருப்பது வேதனை தருகிறது.
தரக்குறைவாகத் தாம் இவ்வாறு செயற்படுவதை சிலர் பெருமையாக எண்ணி சமூக ஒற்றுமையைக் குலைத்து வருவதனையும் அவதானிக்க முடிகிறது. இத்தகைய சிலர் குறித்து பொறுப்புள்ள அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த கருத்துக்களைக்கூட இவர்கள் உதாசீனம் செய்திருப்பதானது இவர்கள் சமூகத்தின் நன்மைக்காக அல்ல தமது சுயநலத்திற்காகவே இவ்வாறு செய்கின்றனர் என்பதை புலனாக்கியது. இது அவர்களது அறிவீனத்தை வெளிக்காட்டுவதுடன், ஊடகவியலாளர் எனும் அவர்களது நற்பெயருக்கும், அவர்கள் தொழில்புரியும் ஊடக நிறுவனத்திற்கும் இழுக்கை ஏற்படுத்துவதாகவே அமைகிறது. முகநூல் ஏற்படுத்தப்பட்டமைக்கான நோக்கத்தை இத்தகைய சிலர் புரிந்து கொள்ளாதிருப்பது வேதனை தருகிறது.
No comments:
Post a Comment