Tuesday, December 2, 2014

முகமூடி அரசியலின் மற்றொரு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 02, 2014
இலங்கை::முகமூடி அரசியலின் மற்றொரு வடிவமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் யாழ். பல்கலைக்கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்; காலத்துக்குக் காலம் தமது கொள்கைகளையும் நிலைப்பாட்டையும் மாற்றும் சுயநல அரசியல்வாதிகள் மக்களின் நலன்களில் ஒருபோதும் அக்கறை கொள்ளமாட்டார்கள். இவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வினையும் காண முன்வரமாட்டார்கள். அவ்வாறு தீர்வினைக் காணும் பட்சத்தில் அவர்களுக்கு அரசியல் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர்கள் விரும்பவும் மாட்டார்கள்.
 
முன்னர் தமிழரசுக் கட்சி என்றும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் காலத்துக்குக் காலம் தம்மையும் தமது கொள்கைகளையும் மாற்றும் இவர்கள் சுயநல அரசியல்வாதிகளே.
இவ்வாறானவர்களின் தவறான வழிநடத்தல்களே எமது மக்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக அமைந்தன.
 
அது மட்டுமன்றி சில தமிழ் ஊடகங்கள் வியாபார நோக்கை கருத்தில் கொண்டு தமது சுயலாபங்களுக்காக மக்களை உசுப்பேற்றும் வகையில் உண்மைக்கு புறம்பானதும் தவறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்தமையும் மக்களின் அவலங்களுக்கு காரணமாகவும் அமைந்திருந்தன.

எதிர்காலங்களில் மக்கள் சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வதனூடாகவே வாழ்வாதாரத்திலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றங்களை காண முடியும். அந்த வகையில், நாம் நடைமுறை சாத்தியமான உண்மை வழியில் மக்களது அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதையே நோக்காகக் கொண்டு திட்டங்களை வகுத்து அவற்றை அரசின் கொள்கைத் திட்டங்களுக்கமைவாக முன்னெடுத்து வருகின்றோம் என சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment