இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இரண்டு தற்காலிக முகாம்களில் இருக்கும் தமிழ் மக்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 28-12-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மத்தியில் குறை, நிறைகளை கேட்டறிந்து கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறித்த மக்களுக்கு உடணடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் 333 குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இவ் விஜயத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் எம்.ஐ.எம். வஹாப்தீன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மொண்டி, ஆரையப்பதி பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ. குணரட்னம், உதவிப் பணிப்பாளர் மனோஹிதராஜ், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஆர். இன்பராஜன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியில் அரிசி, சீனி, பால்மா, மீன் டின், பருப்பு, பிஸ்கட் , மா, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment