Wednesday, December 31, 2014
இலங்கை::எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். பொதுவான காரணங்களை
இலங்கை::எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். பொதுவான காரணங்களை
இதற்கு சொல்ல முடியாது. தென்பகுதி வாக்குகளைப் பாதுகாப்பதற்காகவே ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
தமிழ் வாக்குக்களை வெல்லுவதற்காக மைத்திரிக்கு ஆதரவு என
அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரியை ஆதரிக்கும் கூட்டமைப்பு ஏன்
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை
என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.
எந்தவித இணக்கமுமின்றி ஒப்பந்த மும் இன்றி எப்படி மைத்திரிபால
சிறிசேனவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்கலாம். இதன் மூலம்
உண்மைநிலையினை தெற்கு மக்களுக்கும் கூறாது வடக்கு மக்களுக்கும்
கூறாதநிலையே காணப்படுகின்றது. இவ்வாறான அரசியல் தலைவர்கள் சிறந்த
தலைவர்களா? தெற்கு மக்களையும்,வடக்கு மக்களையும் இவர்கள்
ஏமாற்றுகின்றனர். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அமைச்சராக
இருந்தவர். கட்சியின் செயலாளராகவும் செயற்பட்டவர். இவரது
கொள்கையும் ஜனாதிபதியின் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. இந்த
நிலையில் ஜனாதிபதிக்கு கூட்டமைப்பினர் சந்தர்ப்பத்தை
வழங்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மைத்திரியுடன் ஒப்பந்தமும் இல்லை. பேச்சுவார்ததை நடத்தவும்
இல்லை என்று கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அப்படியானால் அவர்
தேர்தலில் வெற்றிபெற்றால் என்ன நடக்கும். அவர் வெற்றி பெற்ற பின்னர்
பேசுவோம் என கூட்டமைப்பு சிந்தித்திருந்தால் ஏன் அந்த சந்தர்ப்பத்தை
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங்கவில்லை. சிங்கள, தமிழ்
மக்களை ஏமாற்றும் வகையிலேயே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது.
இது குறித்தும் மக்கள் சிந்திக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு
செயலாளர் எடுத்துக்கூறினார்.
தேசிய தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று பாதுகாப்பு
அமைச்சில் சந்தித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
கலந்துரையாடினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது,
கேள்வி:- ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- ஜனாதிபதி வெற்றிபெறுவார்.
கேள்வி:- வடபகுதியின் தற்போதைய நிலை குறித்து திருப்தியடைகின்றீர்களா?
பதில்:- வடக்கில், இன்று மக்களுக்கு சுதந்திரம்
உள்ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன்
பின்னர் யாழ். குடாநாட்டில் இராணுவப் பிரசன்னம் அதிகமாக இருந்தது.
தற்போது அந்த நிலை இல்லை. பெருமளவான இராணுவ முகாம்கள்
அகற்றப்பட்டுள்ளன. பெருமளவான காணிகள் மீளவும் மக்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன. வடக்கில், இராணுவத்தினர்
நிலைகொண்டிருப்பதாகவும், காணிகள்,
சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவற்றை ஒரே இரவில் செய்து விட முடியாது.
இராணுவப்பிரசன்னமானது நிரந்தர சமாதானம் ஏற்படும் வரையில்
வடக்கில் அவசியமானதாகும். முப்பது வருட யுத்தத்தின் பின்னர் ஒரே
இரவில் சகலவற்றையும் அகற்றிவிட முடியாது. மீண்டும் 1980 ஆம்
ஆண்டுகளுக்கு நாம் செல்ல முடியாது. வடக்கில் சட்டம்,
ஒழுங்குபொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும்
பொலிஸாரை பொலிஸ் நிலையங்களில் நியமித்து வருகின்றோம். இதற்கென விசேட
பயிற்சிக்கல்லூரிகளை ஆரம்பித்து வருகின்றோம்.
இராணுவத்தினருக்கும் தமிழ் பேசுவதற்கு பயிற்சி
அளிக்கப்படுகிறது.
வடக்கில் அபிவிருத்திகள் இடம் பெறுகின்றன. வீதிகள், புகையிரத
வீதிகள், அமைக்கப்படுகின்றன. மின்சாரம், குடிநீர் வசதிகள்,
மேற்கொள்ளப்படுகின்றன. இறுதி யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட
தங்க நகைகளை நாம் மீளவும் கையளித்து வருகின்றோம். தங்க
நகைகளுக்குரியவர்களின் விபரங்களை பெறுவதில் சிரமம்
ஏற்பட்டமையினாலேயே இவற்றைமீள வழங்குவதில் காதலதாமதம்
ஏற்பட்டிருந்தது.
படையினர் வசமிருந்த காணிகளில் பெரும்பான்மையான காணிகள் மீளவும்
வழங்கப்பட்டுள்ளன. பலாலி, முகாமை அண்மித்த காணிகள் கூட மீள
கையளிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டுக்கு முன் யாழ்ப்பாணமே
முகாமாக இருந்தது. தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. மக்களின்
சுதந்திரத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்கின்றோம்.
கேள்வி:- வேறு என்ன நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டிருந்தீர்கள்?
பதில்:- யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட
பின்னர் ஈ.பி.டி.பி., பு.ௌாட், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற
குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நாம் மீளப்பெற்றோம். வடக்கில்
ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காகவே மிகுந்த சிரமத்தின் மத்தியில்
இந்தப் பணியினை மேற்கொண்டோம். ஆனால் இந்த செயற்பாட்டை கூட தமிழ்
தேசியக்கூட்டமைப்பு அங்கீகரிக்கவில்லை. அரசாங்கத்திற்கு உதவிய
இந்த இயக்கத்தினரிடமிருந்து ஆயுதங்களை நாம் பெற்றிருந்தோம்.
வடக்கில் முன்னர் தேர்தல்களை நடத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு
ஆயுத தாரிகளின் விடயம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்தும். ஆனால்
இப்போது அந்த நிலை இல்லை.
இந்த விடயத்தில் நாம் நேர்மையான தீர்மானத்தை எடுத்திருந்தோம்.
தற்போது வடக்கிற்கு யாழ்தேவி செல்கின்றது. இது முக்கிய விடயமாகும்.
1970 களில் நான் படையில் கடமையாற்றியபோது இரவு ரயிலேயே
காங்கேசன்துறை சென்று வந்தேன். இப்போது மீண்டும் அந்த நிலை
ஏற்பட்டிருக்கின்றது.
கேள்வி:- அரசாங்கம் எதனையும் செய்யாமையினால்
ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை
ஆதரிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து உங்களின்
கருத்து என்ன?
பதில்:- இந்த முடிவில் கூட்டமைப்பில் உள்ள சிலர்
உடன்படவில்லை என்று தெரிகின்றது. அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து
ஐந்து வருடங்களில் செய்தவற்றை பார்க்கவேண்டும். யுத்தம் முடிவடைந்த
நிலையில் 3 இலட்சம் மக்கள் அகதிகளாக இருந்தனர். கண்ணிவெடிகள்
புதைக்கப்பட்டிருந்தன. 13 ஆயிரம் விடுதலைப்புலிகள்
சரணடைந்திருந்தனர். 5 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தடுப்பு
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஐந்து வருடங்களுக்குள்
3 இலட்சம் மக்களை மீளக்குடியேற்றி புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து
சமூகத்துடன் இணைத்து தடுப்பு முகாம்களில்
வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்து கண்ணிவெடிகளை அகற்றி
மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவந்துள்ளோம். இதேபோல்
ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களையும் களைந்துள்ளோம்.
அத்துடன் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள்
என்பவற்றை நீதி, நியாயமாக நடத்தினோம். இவ்வாறு அரசாங்கம் மேற்கொண்ட
சேவைகளை கூட்டமைப்பு கூறவில்லை. வடமாகாணசபைத் தேர்தலில்
கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று தெரிந்திருந்தும் நாம் தேர்தலை
நடத்தினோம். இவ்வாறன நிலையில் கூட்டமைப்பினர் தெரிவிக்கும்
குற்றச்சாட்டு நியாயமானதா? நாம் மக்களுக்கு . தேவையானவற்றை
செய்துள்ளோம்.
யாழ். நூலகத்தை எரித்தது யார்? மாவட்ட அபிவிருத்தி தேர்தலில்
குழப்பத்தை உருவாக்கியது யார்? 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்கு
பொறுப்பு யார்? என்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டும். தற்போது
அளுத்கம, வன்முறை சம்பவம் தொடர்பில் சிலர் பேசுகின்றனர். இந்தச்
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸ்மா அதிபரை அங்கு
அனுப்பினேன். பொலிஸாரை அங்கு அனுப்பினோம், விசேட அதிரடிப்படையினரை
அனுப்பினேன். பின்னர் இராணுவத்தினரை அனுப்பி உடனடியாகவே
வன்முறையைக் கட்டுப்படுத்தினேன்.
ஆனால் 1983 ஆம் ஆண்டு நடந்தது என்ன? கப்பலில் ஏற்றி தமிழர்களை
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தனர். இதனை இந்த மக்கள் மறக்க
முடியுமா?
ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியில் இப்படி நடக்கவில்லை. மக்கள் இதனை மறந்துவிடக்கூடாது.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதா?
பதில்:- இந்தத் தேர்தலில் எதிரணி வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பிற்கு ஏதாவது
ஒரு காரணம் இருக்கவேண்டும். பொதுவாக காரணங்களை சொல்ல முடியாது.
தென்பகுதி வாக்கினை பாதுகாப்பதற்காக மைத்திரியுடன் ஒப்பந்தம்
இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குக்களைப் பெறுவதற்காக
மைத்திரிக்கு ஆதரவு என்றும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
மைத்திரியை ஆதரித்தமைக்கான காரணம் என்ன என்பதை கூறவேண்டியது
அவசியமாகும். காரணம் இன்றி ஆதரித்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்ற
பின்னர் கூட்டமைப்பின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்
பின்னர் யுத்தம் செய்வதா? ஆயுதம் ஏந்தி போராடுவதா?
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ செயற்பாட்டில் பல விடயங்களை
காண்பித்துள்ளார். சமாதானம், ஸ்திரத்தன்மையை அவர் செயற்பாட்டில்
ஏற்படுத்தியுள்ளார். அரசியல் வேறுபாடுகள் இருந்தால் பேசித்
தீர்த்திருக்கலாம். இந்த நிலையில் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை
அளித்து கூட்டமைப்பினர் பார்த்திருக்கலாம்.
மைத்திரியை எந்தவொரு இணக்கமுமின்றி பேச்சுவார்த்தை இன்றி
ஒப்பந்தம் இன்றி எப்படி கூட்டமைப்பு ஆதரித்திருக்க முடியும். தெற்கு
மக்களிடமும் வடக்கு மக்களிடமும் உண்மையை மறைத்து கூட்டமைப்ப
செயற்படுகின்றது. இத்தகையவர்களை எவ்வாறு சிறந்த தலைவர்களாவர்.
இத்தகைய செயற்பாடு ஒப்பந்தம் செய்து கொள்வதைவிட மோசமானதாகும்.
தெற்கு மக்களையும் வடக்கு மக்களையும் ஏமாற்றும் வகையில்
செயற்பட்டுள்ள கூட்டமைப்பு மைத்திரிக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை
ஏன் ஜனாதிபதிக்கு வழங்கவில்லை.
அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தவர்,
கட்சியின் செயலாளராக செயற்பட்டவர். அவரின் கொள்கையும்,
ஜனாதிதியின் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. ஜனாதிபதியின்
கொள்கையில் நின்ற மைத்திரியிடம் இதனை எதிர்பார்க்கிறோம் என
கூட்டமைப்பு கூறவேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் மக்களை இவர்கள்
ஏமாற்றுகின்றனர்.
மைத்திரியுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறி இரு பகுதி
மக்களையும் ஏமாற்றவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்கள்
அனைவரிடமும் பழிவாங்கும் எண்ணமே காணப்படுகின்றது.
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலின் போது வடபகுதி
வாக்களிப்பை தடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றம்
சாட்டப்படுகின்றதே. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்.
பதில்:- ஐக்கிய
தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே அவ்வாறு நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்தவின் கீழ் இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தல்கள்,
வடமாகாணசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற ஜனாதிபதி
தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கு எங்காவது தடுக்கப்பட்டதா?
ஜனாதிபதியின் ஆட்சியில் தான் வடக்கு மக்கள் நீதியாகவும்,
சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனை
தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிராகரிக்க முடியுமா?
கேள்வி:- கூட்டமைப்பின் ஆதரவினை அரசாங்கம் கோரியிருந்ததா?
பதில்:- அதற்கு சம்பந்தனை பிடிக்கவேண்டுமே, ஜனாதிபதி வடபகுதி மக்களுடன்தான் பேசினார்.
கேள்வி:- மைத்திரியை ஆதரிக்கும் முடிவடை
அறிவிக்கும் போது சர்வாதிகார ஆட்சியை நோக்கி இலங்கை செல்வதாக
கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் உங்களின் பதில்
என்ன?
பதில் :- 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் கேலிக்குரியதாகும்.
கேள்வி:- அரசாங்கத்தில் அங்கம் வகித்த ரிஷாத்
பதியுதீனின் கட்சி விலகி எதிரணிக்கு ஆதரவு அளித்துள்ளது. இது
குறித்து என்ன கூறுகின்றீர்கள்.?
பதில்:- ரிஷாத் பதியுதீன் தொடர்பில் தமிழ்
தேசியக்கூட்டமைப்பு என்ன நிலைப்பாடு எடுக்கவுள்ளது.
வன்னிப்பகுதியில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில்
தமிழர்களது காணிகள், சுவீகரிக்கப்பட்டதாகவும், இவரினால்
முஸ்லிம்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும்,
குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. மீன்படி தொழிலுக்கு தடைகள்
ஏற்படுத்தப்பட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இப்போது ரிஷாத் எதிரணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில்
முஸ்லிம்களின் குடியேற்றத்தை நிறுத்துமாறு கூட்டமைப்பு
மைத்திரியிடம் கோருமா? சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள வழங்குமாறு
கூட்டமைப்பு கூற முடியுமா?
ஜனாதிபதியுடன் ரிஷாட் இருக்கும் போது காணி சுவீகரிப்பு தொடர்பில்
குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன. இன்று மைத்திரியிடம் அவர்
சென்ற பின் அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விட்டதா?
கூட்டமைப்பு இந்த விடயத்தில் என்ன செய்யப் போகின்றது. இதற்கு கூட்டமைப்பு பதலளிக்கவேண்டும்.
கிழக்கில் அம்பாறையிலும தமிழ் மக்களின் காணிகள்
சுவீகரிக்கப்பட்டிருந்ததாக
குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் ஹக்கீம், தற்போது
எதிரணியில் நிற்கின்றார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண
கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது. மட்டக்களப்பிலும் தமிழ்
மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. இதனை
கூட்டமைப்பினரால் மீளப்பெற முடியுமா?
ஜனாதிபதியுடன் இருக்கும் போது இவர்கள் கெட்டவர்களாக இருந்தனர்.
தற்போது மைத்திரியுடன் இணைந்ததும் நல்லவர்களாக மாறிவிட்டனரா? இது
குறித்தும் கூட்டமைப்பு பதிலளிக்கவேண்டும்.
கேள்வி:- மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைஅமைத்துக்கொடுக்கும் பணி ஆரம்பித்துள்ளதா?
பதில்:- ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியில் எதனையும் செய்து காண்பிக்கின்றார். அங்கு வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- யுத்தத்தின் போது மூவாயிரம் இராணுவம் வரை
காணாமல் போயிருந்தனர். அவர்களது சடலங்கள் கூட கைப்பற்றப்பட்டிருக்கவில்லை.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆயிரம் இராணுவத்தினர் வரை
பலியாகியிருந்தனர். இராணுவத்தினரிலேயே மூவாயிரம் பேரைக்காணவில்லை என்றால்
புலிகள் தரப்பிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள்
சண்டைகளில் இறந்திருக்கலாம். ஆனால் அதனை அறியமுடியாது. இதுதான் நிலைப்பாடாக
உள்ளது. இருந்தபோதிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப்பத்திரங்களை
வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
யுத்தகாலத்தின் போது படைவீரர்களது தாய்மார் என்னை வந்து சந்திப்பார்கள்,
தான் சாத்திரம் பார்த்ததாகவும், காணாமல் போன தனது மகன் கிளிநொச்சியில்
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தாயார் தெரிவித்தார். ஆனால் அந்த வீரர்
சண்டையில் உயிரிழந்தமை எமக்குத் தெரியும். இவ்வாறு காணாமல்போனோரது நிலைமை
இருக்கின்றது. இவர்கள் யுத்தத்தில் உயிரிழந்திருப்பர். ஆனால் அதனை நாம்
நிரூபிக்க முடியாத நிலை இருக்கின்றது.
No comments:
Post a Comment