Tuesday, November 25, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளரின் உருவப் பொம்மை எரிப்பு!


Tuesday, November 25, 2014
இலங்கை::யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சிவரஞ்சனுடைய உருவப்பொம்மை, இந்த பிரதேச சபைக்குட்பட்ட பிரான்பற்று, பல்லசுட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்களால் சங்கானை பிரதேச சபைக்கு முன்பாக வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை எரிக்கப்பட்டது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், யாழ். மாவட்ட இராணுவத்தினரால் பல்லசுட்டி கிராமத்தில் 52 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இராணுவத்தினரால் வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்;கு உபதவிசாளர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அத்துடன் வீடுகள் கட்டுவதற்கான மணல், கற்கள் கொண்டு செல்வதற்கு வீதித்தடைகள் ஏற்படுத்தி தடை செய்யப்போவதாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில், தங்களுக்கு கிடைக்கின்ற வீடுகளை உபதவிசாளர் இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் அவரது உருவப்பொம்மையை எரித்துள்ளனர்.இது தொடர்பில் வலி. மேற்கு பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் கருத்துக்கூறுகையில்
 
 மேற்படி கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். ஓலைக்குடிசையில் வாழுகின்ற அந்த கிராம மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படுவதை வரவேற்கின்றோம்.அமைக்கப்படும் வீடுகள் ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே அமைக்கப்படுகின்றன. ஒருவர் மாடி வீட்டிலும் இன்னொருவர் குடிசையிலும் வாழ்வது சமத்துவத்தை தராது. ஆகவே பின்தங்கிய அந்த கிராம மக்களுக்கு வீடுகள் கிடைப்பதை வரவேற்கின்றோம் எனக்கூறினார்.மேற்படி பிரதேச சபை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment