Tuesday, November 4, 2014

இலங்கை துறைமுகத்தில் போர்க் கப்பல்கள் வருகை: சீனா விளக்கம்!

Tuesday, November 04, 2014
பெய்ஜிங்::இலங்கைத் துறைமுகத்தில் சீன நாட்டுக் கடற்படையின் நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவது சாதாரணமான நிகழ்வுதான் என சீனா தெரிவித்துள்ளது.
 
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனக் கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், இது வழக்கமான நிகழ்வுதான் என சீனா விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக சீனப் பாதுகாப்புப் படை உயரதிகாரி ஒருவர், அந்நாட்டின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:
 
பாரசீக வளைகுடா, சொமாலியா கடல் பகுதிகளில் கடற்கொள்ளையர்களைக் கண்காணிக்கும் பணிக்காக இலங்கைத் துறைமுகத்தில் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
 
கப்பல்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே இலங்கைத் துறைமுகத்தில் சீனப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இது வழக்கமான நிகழ்வுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையையொட்டி, அப்போதும் இலங்கைத் துறைமுகத்தில் இதுபோல் சீனக் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment