Wednesday, November 5, 2014

மீனவர்களுக்கு தூக்கு: மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை!

Wednesday, November 05, 2014
மதுரை::தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டார்.
 
போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எமர்ச னின் மனைவி லாவண்யா (31) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
 
ன் கணவர் எமர்சன் மற்றும் அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகியோர் கடந்த 2011 நவ. 28-ல் கடலுக்கு மீன் பிடிக்க இயந்திரப் படகில் சென்றனர். அப்போது அவர்களை ஹெராயின் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். என் கணவர் உள்ளிட்ட 5 பேரும் அப்பாவிகள். அவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை.
 
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை சட்டப்படி அதிகபட்சம் ஆயுள் தண்டனைதான் வழங்க முடியும். அதையும் மீறி 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தண்டனை பெறும் இந்தியர்களுக்கு மத்திய அரசு தேவையான சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மீனவர்களை மீட்க மத்திய அரசு மேல்முறையீடு செய்து, வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், இதுவரை 5 பேரை மீட்கவும், மேல்முறையீடு செய்யவும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இலங்கை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எங்களுக்கு போதிய வசதி, வாய்ப்புகள் இல்லை. எனவே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் மீட்க மேல்முறையீடு செய்யவும், வழக்கறிஞரை நியமிக்கவும், வேண்டிய சட்ட உதவிகளை இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவரை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது. இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், தனி நீதிபதி விசாரிக்க முடியாது. எனவே, இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பட்டியலிட பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
இதனிடையே, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை, மதுரை மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன் புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
இலங்கை உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த், லாங்லெட் மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் கிறிஸ்துராஜா சீல்தன், ஞானப்பிரகாசம், துஷாந்தன் கமல கிறிஸ்ரியன் ஆகிய 8 மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.
 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேர் உட்பட தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 மீனவர்களும், கொழும்பு வெலிக்கடை சிறையில் தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனிச்சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மாற்றப்பட்டனர். இதனால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

No comments:

Post a Comment