Saturday, November 1, 2014

காங்கிரஸ் கட்சி உடைகிறது: தமிழகத்தில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Saturday, November 01, 2014
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் உடைகிறது. மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க வாசன் திட்டமிட்டுள்ளார். இதற்காக  மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கான பயணத்தை நாளை தொடங்குகிறார்.தமிழக காங்கிரசின் உறுப்பினர் அட்டையில்  இருந்து காமராஜர், மூப்பனார் படங்களை அகற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது  பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். மாநில தலைவர் ராஜினாமா செய்தது, காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படங்கள்  நீக்கம் தொடர்பாக ஜி.கே.வாசனும் மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால், கட்சி தலைமை இதை ஏற்று கொள்ளவில்லை  என்று கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் காங்கிரஸ் உடையும் நிலை உருவானது. ஜி.கே.வாசன் தலைமையில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகும்  நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் இரவு ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து  பேசினார். அவரை சமாதானப்படுத்த முயன்றார். அதுவும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் காமராஜ், மூப்பனார் இல்லாத அடையாள அட்டையை ஏற்று கொள்ள  முடியாது என்று வாசன் ஆதரவாளர்கள் எதிர்ப்பை காட்ட தொடங்கியுள்ளனர்.மேலும், தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்து வருகின்றனர். குறிப்பாக வாசன்  ஆதரவாளரான காங்கிரஸ் பொருளாளர் கோவை தங்கம் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பல மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தங்களது  ராஜினாமா கடிதத்தை வாசனிடம் கொடுத்தனர்.

 இந்த நிலையில், வாசன் ஆதரவாளர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் குவிய தொடங்கினர். மேலும், முன்னாள்  எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளும் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அனைத்து மாவட்டங்களுக்கும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கலாம் என்று கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டது.இதையடுத்து தொண்டர்களின் கருத்து கேட்க ஜி.கே.வாசன் நாளை காலை 6 மணி விமானம் மூலம் கோவை செல்கிறார்.

அங்கு கட்சி நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் திருப்பூர் சென்று ஆலோசனை நடத்துகிறார். பின்னர், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும்  ஜி.கே.வாசன் செல்கிறார். அதன் பின்னர் பிற கட்சி தலைவர்களையும் சந்திக்க வாசன் திட்டமிட்டுள்ளார். தொண்டர்களிடம் கருத்து கேட்ட பின்னர் மீண்டும்  தமிழ்மாநில காங்கிரஸ் உருவாக்குவது குறித்து முடிவை அறிவிக்கிறார். வாசனின் இந்த திடீர் வேகம் டெல்லி தலைமையையும் சீர்குலைத்துள்ளது. இது தமிழக  காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment