Monday, November 3, 2014

பாகிஸ்தான் வாகா (இந்தியா)எல்லையில் தற்கொலை படை தாக்குதல்: 55 பேர் பலி!

Monday, November 03, 2014
லாகூர்::பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர்.

அப்போது அங்கே வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு ‘கேட்’ மீது மோதி, தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அப்போது அந்தப் பகுதியே அதிர்ந்தது. எங்கும் ஒரே மரண ஓலம் கேட்டது. அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த சம்பவத்தில் 55 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே ரத்த களறியாக காணப்பட்டது. மனித உடல் உறுப்புகள் சிதறி கிடந்தன. அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை உள்ளூர் டி.வி. சேனல்கள் படம் பிடித்து காட்டின.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும்.

லாகூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நெருக்கடி நிலை அறிவித்து, உஷார் படுத்தப்பட்டுள்ளன.

முதலில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததாகத்தான் தகவல்கள் பரவின. பின்னர்தான் தற்கொலை படை தாக்குதல் என தெரிய வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸ் ஐ.ஜி. முஸ்டாக் சுகேரா நிருபர்களிடம் பேசும்போது, “கொடி இறக்க நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் இந்த தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. அணிவகுப்பு முடிந்து, கூட்டத்தினர் புறப்படுகிறபோது, நுழைவாயிலில் தற்கொலை படை தீவிரவாதி மோதி தாக்குதல் நடத்தி உள்ளார்” என கூறினார்.

சம்பவ இடத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து சீல் வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பஞ்சாப் மாகாண அரசுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment