Thursday, October 30, 2014

மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க உடனடி உத்தரவு!

Thursday, October 30, 2014
புது டெல்லி::மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
 
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் கடந்த 2ம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத் உல ் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டோரும் அந்த அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவர்களுக்கு தேவையான வெடிபொருட்களை தயாரித்து வழங்கியதும் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவிலான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
 
இந்நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீட்டை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு படை தலைவர் ஜெயந்தா சௌத்ரி, தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் சரத்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அஜித் தோவல் சந்தித்தார். அப்போது இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகளின் தொடர்பு விசாரணையின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து ராஜ்நாத்சிங்கிடம் விளக்கமளித்தார்.
 
இதையடுத்து மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பின் முகாம்கள் அனைத்தையும் உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு ராஜ்நாத்சிங் உத்தரவிட்டார். இந்த சூழலில் ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 20 முதல் 30 குழுக்கள் நாடு முழுவ தும் பரவியிருப்பதாக பர்த்வானில் விசாரணை மேற்கொண்டு வரும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மேற்கு வங்கம், அஸ்ஸாம், தென் பகுதிகளில் அவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து மாநில அரசின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.

No comments:

Post a Comment