Wednesday, October 22, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 33 மாகாணசபை உறுப்பினர்கள் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர்.
வட மாகாணசபையைச் சேர்ந்து 28 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் இவ்வாறு கடிதம் அனுப்பியிருந்தனர்.
நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலும், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் பேணி வரும் சமூக உறவுகளை பாதிக்கும் வகையிலும் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது என நுகேகொடை பொல்வத்த என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த கால்லகே ரவிந்திர நிரோசன் என்பவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் 120 சரத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட முடியும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 30ம் திகதி பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென, மனுவை பரிசீலனை செய்த விஜித மலல்கொட மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய நீதவான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment