Friday, October 24, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தற்போது தமிழ் மக்களைப் பற்றிய கரிசனை கொஞ்சமும் கிடையாது: சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஷான் ராசமாணிக்கம்!

Friday, October 24, 2014
இலங்கை::
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தற்போது தமிழ் மக்களைப் பற்றிய கரிசனை கொஞ்சமும் கிடையாது என்று சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஷான் ராசமாணிக்கம் சாடியுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஷான் ராசமாணிக்கத்தின் நேர்காணல் ஒன்றை இன்றைய தினமிண பத்திரிகை பிரசுரித்துள்ளது.
இதன்போது ஷான் ராசமாணிக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது வடமாகாண மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்களால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்க முடியாது.
 
தற்போதைய நிலையில் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைமைத்துவத்தின் பின்னால் அணிவகுப்பதே சிறந்த தெரிவாக இருக்க முடியும். அதன் காரணமாகவே கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுகின்றேன்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மீது கொஞ்சமும் கரிசனை கிடையாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் அக்கறை கிடையாது.
 
கிழக்கு மற்றும் தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புரிந்துணர்வு கிடையாது.
தற்போதைய அரசாங்கம் வடக்கு- கிழக்கு மற்றும் இலங்கையில் பரந்து வாழும் தமிழர்களுக்கு அநீதிகளை இழைக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடுநிலையான நபர். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளார்.
 
இதுவரை வேறு எந்தத் தலைவருக்கும் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அதேபோன்று கடந்த நாற்பது வருடங்களில் காணாத அபிவிருத்தியை ஐந்து வருடங்களுக்குள் நாடு கண்டுள்ளது.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த உண்மைகளை மக்களிடம் மறைத்து வருகின்றார்கள். மக்கள் உண்மைகளைப் புரிந்து கொண்டால் அவர்களின் அரசியல் அஸ்தமித்துவிடும் என்ற பயம் கூட்டமைப்பினருக்கு உண்டு.
 
வட மாகாண சபையும் கூட்டமைப்பின் கைப்பிள்ளையாகவே செயற்படுகின்றது. போதுமான செயற்திறன் மாகாணசபை நிர்வாகத்திடம் இல்லை. மக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு பில்லியன் ரூபா பணம் அப்படியே செலவழிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் உரிமை என்ற பேரால் அபிவிருத்தியை மறைக்க முற்படுகின்றார்கள். நிராகரிக்கின்றார்கள்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் எத்தனையோ சிங்கள அப்பாவிகளை கொலைசெய்துள்ளார். அப்போது எல்லாம் அவருக்கு மனித உரிமைகள் தொடர்பில் ஞாபகம் வரவில்லையா? அப்பாவி தமிழ் மக்களை அவர்கள் படுகொலை செய்யவில்லையா?
 
இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முயற்சிகள் எடுப்பதற்குப் பதிலாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளை திருப்திப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
 
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ நேர்மையானவர். எந்தவொரு சர்வதேச சக்திக்கும் அடிபணியாதவர் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஷான் ராசமாணிக்கம் தொடர்ந்தும் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment