Tuesday, October 28, 2014

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்த மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்!

Tuesday, October 28, 2014
சென்னை:மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு வருவதும் அவர்களின் படகுகள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருப்பது குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினேன். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரினேன்.
 
ஏற்கனவே தான் இது குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் விளக்கினார். உடனடியாக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
 
மேலும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி முயற்சியாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் முயற்சியாலும் உடனடியாக இது நடக்கும் என்று நம்புகிறேன்.
 
தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நீண்ட கால தீர்வு திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவித்தார்கள். ஆழ் கடலில் மீன்பிடித்தல் மற்றும் மீன் உற்பத்தியை பெருக்கவும் மின் பிடிப்புக்குரிய புதிய தேவைகளை உணர்ந்து பல கோணங்களில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்பதனை தெரிவித்தார்.
 
நிரந்தர தீர்வு ஏற்படும் வரை இடைக்கால தீர்வுக்கு நமது அரசு முயல வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தபோது, அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார். எனவே அதிவிரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment