Wednesday, October 1, 2014

மோடிக்கு விருந்து அளித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா! ஆப்கனில் படைகளை வாபஸ் பெற அவசரம் காட்ட கூடாது: பிரதமர் நரேந்திரமோடி!

Wednesday, 01, October, 2014
வாஷிங்டன்::வாஷிங்டன்::ஐந்து நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுக் கூட்டம், மெடிசான் மைதானத்தில் உரை என பல்வேறு நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார். வாஷிங்டனின் வில்லியம் பர்ன்ஸ் ஆண்ட்ரூஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் வில்லியம் ப்ரூன்ஸ் அரசு மரியாதையுடன் வரவேற்றார்.
 
விமான நிலையத்தில் கூடி இருந்த அமெரிக்க-வாழ் இந்தியர்கள், மோடியை காண பெரும்திரளாக வந்திருந்தனர். 'மோடி, மோடி' என்று கோஷமிட்ட அவர்களின் அருகே சென்ற மோடி, கைக்குலுக்கி உற்சாகமாக நன்றி தெரிவித்தார். அங்கிருந்து ப்ளேய்ரில் உள்ள அமெரிக்க அதிபர் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அங்கு பிரதமர் மோடியின் வருகைக்காக காத்திருந்த அமெரிக்க ஒபாமா, அவரை குஜராத்தி மொழியில் வரவேற்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பிரதமருடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர். அங்கு அனைவரும் இரவு உணவு விருந்தில் கலந்துகொண்டனர்.
 
இதில் பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா வாஷிங்டனில் இல்லாததால், அவர் இந்த விருந்து ஏற்பாட்டில் கலந்துகொள்ளவில்லை.
இது குறித்து மேலும் விவரித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் அக்பரூதீன், "பிரதமர் நரேந்திர மோடி விருந்தில் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே அருந்தினார். இதனை அடுத்து பிரதமர் மோடியுடன் அந்நாட்டு அதிபர் ஒபாமா பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இரு நாட்டுத் தலைவர்கள் பேச்சில், அரசு சார்ந்த அவர்களது பங்களிப்புகள், முயற்சிகள், வெற்றி - தோல்விகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. குறிப்பிடும் வகையில், விஷயம் சார்ந்த பேச்சு எதுவும் நடைபெறவில்லை.
 
மாறாக, அவர்களின் உரையாடல் மிகவும் எளிமையாக, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் முயற்சியாக இருந்தது. இதன் பின்னர் மேற்கொள்ளும் சந்திப்பில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்" என்று அவர் கூறினார்.
 
இதனிடையே இந்தச் சந்திப்பு குறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "காலநிலை மாற்றத்தின் பாதக விளைவுகளுக்கு எதிராக இணைந்து போராடுவோம். பெண்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களுக்கான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இரு நாடும் இணைந்து செயல்படுவோம்.பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடி, உலக நாடுகளுக்கு முன்னோடியாக செயல்படுவோம் என்பது போல சில அரசு ரீதியிலான பேச்சு நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
ஆப்கனில் படைகளை வாபஸ் பெற அவசரம் காட்ட கூடாது: பிரதமர் நரேந்திரமோடி!
 
ஈராக்கில் செய்தது போல ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதில் அமெரிக்கா அவசரம் காட்ட கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்தார். இது தொடர்பாக அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான குழுவில் அவர் பேசியதாவது,
ஈராக்கில் இருந்து படைகளை அவசரமாக வாபஸ் பெற்று தவறு செய்தது போல ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தவறு செய்து விட கூடாது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் ஏற்பட்டு  விட கூடாது. ஆகையால் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா மெதுவாகவே வாபஸ் பெற வேண்டும்.
 
தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் என்றும், கெட்ட தீவிரவாதம் என்றும் எதுவும் கிடையாது. தீவிரவாதத்துக்கு எல்லையோ அல்லது நாடோ கிடையாது. தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரானதாகும். அதற்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டனர். அந்த அரசியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.
 
இதற்கு இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றமே காரணமாகும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளும் திறன் உண்டு. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவைப்படாது என்றார் அவர்.

No comments:

Post a Comment