Monday, September 08, 2014
பலவிதமான எதிர்பார்ப்புக்களுடன் தமிழ்க் கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த வடபகுதி மக்களுக்கு வட மாகாண சபை மூலமாக இதுவரை எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. மக்களுக்கான சேவை எதுவுமே இல்லாது ஒரு வருட காலம் வெறுமனே உருண்டோடி விட்டது. அடுத்த நான்கு வருடங்களையும், அதேபோன்று வீணாக்க அம்மக்களுக்கு விருப்பமில்லை. அதனால் வாக்களித்த தமக்கு எவ்விதமான நன்மையும் இல்லாத வட மாகாண சபையை அரசாங்கம் உடனடியாகக் கலைத்துவிட்டு அதனை மீண்டும் பொறுப்பேற்று வடக்கை முன்னர் போன்று அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு வடபகுதி மக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் எனப் பலரும் தன்னிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்து அரசாங்கத்தின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கொண்டு வருமாறு தன்னிடம் கேட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், யாழ், மாவட்ட அமைப்பாளருமான கலாநிதி மேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள ஏனைய மாகாண சபைகள் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இங்கோ எதுவுமே இல்லை. தம்மால் செய்ய முடியாத இயலாமைக்கு அரசாங்கத்தின் மீது வீண் பழி போடப்படுகின்றது. வெறுமனே அரசியலே பேசப்படுகின்றது. ஒரு சிறு விடயத்தைக்கூட சுயமாகச் செய்ய முடியாதுள்ளனர். கேட்டால் அரசாங்கத்தை குறைகூறி தட்டிக் கழிக்கின்றனர். அரசாங்கத்தை வசை பாடுவதற்காகவே மாகாண சபை கூடுகிறது. இல்லாவிட்டால் கூடித் தங்களுக்குள் மோதிக்கொள்கிறார்கள்.
இறந்தவர்களுக்கு மாகாண சபையில் விளக்கேற்றவும், சைக்கிளில் வந்து படம்காட்டி கார் கேட்கவும், கடன் காரர்களிடமிருந்து தம்பிக்க தமக்குப் பொலிஸ் பாதுகாப்பு கேட்கவும், பத்து மில்லியனில் முதலமைச்சருக்கு சொகுசு கார் வாங்கவும், உறவுகளுக்கு பதவிகள் வழங்கவுமா நாங்கள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம் என மக்கள் தன்னிடம் கூறுவதாகவும் அமைப்பாளர் தங்கராசா தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து மாகாண சபை நிறுவப்படுவதற்கு முன்னதாக மூன்று வருடங்கள் அரசாங்கம் வடபகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை நேரடியாக வழங்கி வந்தது. தமிழ்க் கூட்டமைப்பு ஆட்சிபீட மேறி அவை அனைத்தையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டது. அரசியல் பேசி மக்களை மயக்கி வாக்குகளை அபகரித்து விட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியைப் பெற்று மாகாணத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க முடியாவிட்டால் மாகாண சபை இருந்து என்ன பயன்? இன்னமும் எத்தனை காலத்திற்கு அரசியல் தீர்வு வரும் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறார்கள் எனவும் மக்கள் முதல் கல்விமான்கள், மதத்தலைவர்கள் வரை தன்னிடம் ஆதங்கப்படுவதாகவும் தங்கராசா தெரிவித்தார்.
No comments:
Post a Comment