Sunday, September 28, 2014

தசரா விடுமுறையால் சிக்கல்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?!!

Sunday, September 28, 2014
பெங்களூர்::சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

4 ஆண்டு தண்டனைக்கு இடைக்கால தடை கோரியும், ஜாமீன் கேட்டும் அப்பீல் செய்ய ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடியாக அவர் அப்பீல் மனுவை தாக்கல் செய்யலாம்.

பெங்களூரில் உள்ள கர்நாடகா ஐகோர்ட்டில்தான் ஜெயலலிதா அப்பீல் மனுவை தாக்கல் செய்ய முடியும். வேறு எந்த கோர்ட்டையும் அவர் இதற்காக அணுக முடியாது. ஆனால் கர்நாடக ஐகோர்ட்டை ஜெயலலிதா உடனடியாக அணுக முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

ஏனெனில் தற்போது தசரா விழா காரணமாக கர்நாடகா ஐகோர்ட்டுக்கு 5–ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அது வரை ஜெயலலிதா ஜாமீன் கோரி மனு செய்ய முடியாது என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது மாற்று வழிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கின் தன்மை, மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துச் சொல்லி ஜெயலலிதா அப்பீல் செய்ய முடியும் என்று வக்கீல்கள் கூறுகிறார்கள். அந்த நடை முறை சாத்தியப்படாத பட்சத்தில் விடுமுறை கால கோர்ட்டை அணுக முடியும் என்ற வாய்ப்பு அ.தி.மு.க.வினருக்கு கிடைத்துள்ளது.

பெங்களூர் ஐகோர்ட்டில் தற்போது செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விடுமுறை கால கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பீல் மனு செய்ய அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

ஜெயலலிதா சார்பில் நாளை (திங்கட்கிழமை) அப்பீல் மனுதாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த மனு மீது செவ்வாய்க் கிழமையே விசாரணை நடைபெறக்கூடும்.
ஆனால் அப்பீல் மனு மீது உடனடியாக முடிவு தெரிந்து விடுமா என்பதில் தொடர்ந்து கேள்விக்குறி நீடிக்கிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடகா கோர்ட்டு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவுபடுத்தும் என்பதும் உறுதியாக தெரிய வில்லை. ஜாமீன் கிடைப்பது தொடர்பான முடிவை அறிய ஒரு வாரம் ஆகலாம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் என்று நீதித்துறையில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

இதற்கு எடுத்துக் காட்டாக அவர்கள் ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் லல்லு பிரசாத் யாதவுக்கு ஏற்பட்ட நிலையை சொல்கிறார்கள். 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சவுதாலா, 5 ஆண்டு தண்டனை பெற்ற லல்லு பிரசாத் இருவரும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஜாமீன் பெற முடிந்தது.

திலும் லல்லு பிரசாத் யாதவ், சுப்ரீம் கோர்ட்டு கதவைத் தட்டிய பிறகே ஜாமீன் பெற முடிந்தது. அது போன்ற நிலைதான் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளதாக நீதித்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அது எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் எதுவும் உறுதியாக தெரியவில்லை.

ஒருவேளை கர்நாடகா ஐகோர்ட்டு ஜெயலலிதா அப்பீலை நிராகரித்து ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டால், அடுத்து சுப்ரீம் கோர்ட்டை ஜெயலலிதா அணுக வேண்டும். அங்குதான் ஜாமீன் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த நடைமுறைகளுக்கு குறைந்தது ஓரிரு மாதங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே அதுவரை பெங்களூர் ஜெயிலில் இருக்காமல் ஜெயலிலதாவை தமிழக ஜெயிலுக்கு மாற்ற அ.தி.மு.க.வினர் முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்குப் பதில் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த முதல் அமைச்சர்!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், முதல்– அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். தீர்ப்பையொட்டி பல எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களூர் சென்றனர். இன்று மதியத்துக்குள் அனைவரும் சென்னை திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்– அமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. ஜெயலலிதாவுக்குப் பதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செந்தில்பாலாஜி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலாபால கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரில் ஒருவர் முதல்– அமைச்சர் பதவிக்கு தேர்ந்து எடுக்கலாம் என்று கூறப்பட்டது.

என்றாலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பெங்களூர் கோர்ட்டில் ஆஜரான ஜெயலலிதா, நீதிபதி தீர்ப்பு கூறுவதற்கு முன்பும், தீர்ப்பை அறிந்த பிறகும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசினார். இன்று காலையும் ஜெயலலிதாவை சந்தித்து உள்ளார்.

எனவே ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்–மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்– அமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா விருப்பப்படி நடந்து கொண்டார்.

பின்னர் தண்டனை ரத்தானதும் ஜெயலலிதா முதல்– அமைச்சர் ஆனார். இதனால் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். எனவே ஓ.பன்னீர்செல்வம்தான் மீண்டும் முதல்–அமைச்சர் ஆவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment