Tuesday, September 23, 2014

மோசடி கும்பலுடன் அருண் செல்வராசனுடன் தொடர்பா?!

Tuesday, September 23, 2014
சென்னை::இலங்கை தமிழரான அருண் செல்வராசன், சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கடந்த 10–ந்தேதி கைது செய்யப்பட்டார்.பாகிஸ்தான் உளவாளியான இவர் 5 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து நாசவேலைக்கு சதிதிட்டம் தீட்டியது அம்பலமானது.அருண்செல்வராசனை, பாகிஸ்தான் உளவாளியாக மாற்றியதில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
 
இதன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்துவதற்காக கடந்த 18–ந் தேதி அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்தனர். இன்றுடன் 5 நாட்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இதில் பல்வேறு முக்கிய தகவல்களை அருண் செல்வராசன் கூறியுள்ளார். இவை அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.அருண் செல்வராசனிடம் இருந்து போலி பாஸ்போர்ட், எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ்,
 
பான்கார்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து புரோக்கர்கள் மூலமாக அருண் செல்வராசன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னையை பொறுத்தவரை போலி சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பல் அவ்வப்போது கைதாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுங்கையூரில் போலி சான்றிதழ்களை தயாரித்த மோசடிக் கும்பல் சிக்கியது.
 
கொடுங்கையூர் எம்.ஆர்.நகரை சேர்ந்த கவுதமன், அவரது மகன் லோகேஷ் மற்றும் புரோக்கர்களான சத்தியமூர்த்தி, ஞானவேல் ஆகிய 4 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து குவியல் குவியலாக சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை ரூ.15 ஆயிரத்துக்கும், பிளஸ்–2 சான்றிதழை ரூ.20 ஆயிரத்துக்கும் இக்கும்பல் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழக சான்றிதழ்கள் ரூ.25 ஆயிரத்துக்கும், என்ஜினீயரிங் சான்றிதழ்கள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கவுதமனும், அவரது மகன் லோகேசும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சான்றிதழ்களை வாங்குபவர்கள் யார்? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. புரோக்கர்கள் சொல்லும் பெயருக்கு நாங்கள் சான்றிதழ் தயாரித்து கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.
 
இவர்களது பின்னணியில் ஏராளமான புரோக்கர்கள் செயல்பட்டு சான்றிதழ்களை விலைபேசி விற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த பலரும் இங்கு தங்கியிருந்து போலி சான்றிதழ்களை விற்பனை செய்யும் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர்.
 
இவர்கள் மூலமாக பாகிஸ்தான் உளவாளியான அருண் செல்வராசன் போலி எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழை வாங்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலி சான்றிதழை தயாரித்து கொடுத்த கும்பலின் உதவியுடன்தான் போலி பாஸ்போர்ட்டுகள், பான்கார்டுகளையும் அருண் செல்வராசன் வாங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 
போலி சான்றிதழ் மோசடி கும்பலின் பின்னணி பற்றி விசாரிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கவுதமன் உள்ளிட்ட 4 பேரையும் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர். அப்போது இவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்களை வாங்கியவர் யார்–யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
 
பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனுக்கும் இக்கும்பல் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே போலி சான்றிதழ் கும்பலிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment