Saturday, September 27, 2014

இந்தியா - அமெரிக்கா பங்குதாரர் நாடுகள் அமெரிக்க பத்திரிகைக்கு மோடி பேட்டி!

Saturday, September 27, 2014
நியூயார்க்::இந்தியாவின் இயற்கையான, உலக பங்குதாரர் நாடு அமெரிக்கா. இந்த உறவால் தான், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு, நல்லிணக்கம் நிலகிறது' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரபல, 'தி வால்ஸ்ட்ரீட் ஜார்னல்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது: இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுவதற்கு, அமெரிக்காவில் செழித்து வரும் இந்தியர்களும் ஒரு காரணம். எங்களின் உறவால், உலகளாவிய வளர்ச்சி, உலகம் முழுவதும் வாழும் மக்களின் முன்னேற்றம் மேம்படுகிறது.இருநாடுகளிலும் உள்ள ஜனநாயகம், உறவுக்கு மேலும் வலு சேர்க்கிறது. இதில் எங்களின் தகவல் தொழில்நுட்ப திறன், உறவுக்கு மேலும் கைகொடுக்கிறது.

இந்தியாவில் புதிதாக தொழில் துவங்க, கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. உலகின் உற்பத்தி கேந்திரமாக இந்தியா விளங்கப் போகிறது. இந்திய மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சிக்காக, உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள உள்ளோம். எங்கள் நகரங்களையும், கிராமங்களையும், வளர்ச்சிக்கான இன்ஜின்களாக மாற்ற உள்ளோம்.இவ்வாறு, பிரதமர் மோடி கூறினார்.
 
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஒபாமா அழைப்பை ஏற்று கொண்டார். இதையடுத்து மோடியின் அமெரிக்க பயண திட்டம் வகுக்கப்பட்டது.
 
அமெரிக்காவில் மொத்தம் 5 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி தங்கியிருந்து சுமார் 50 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயண திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் 26ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜெர்மனி தலைநகர் பிராங்பாட்டில் இரவில் விமான போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாள் முன்னதாக புறப்படும் வகையில் மோடியின் பயண திட்டம் மாற்றப்பட்டது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி  25.09.2014 இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஏர் இந்தியா ஒன் என்ற சிறப்பு தனி விமானத்தில் அவர் செல்கிறார். அவருடன் மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் சுமார் 100 பேர் உடன் செல்கிறார்கள். இன்று காலை மோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்று சேர்வார். முதலில் அவர் அந்த நகரில் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுர இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவார். பிறகு ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதை தொடர்ந்து வங்கதேச அதிபர் ஹசீனா, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தும் போது இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசக் கூடும். அது போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசும் போது, நதி நீர் பிரச்சினை, எல்லை பிரச்சினை மற்றும் தீவிரவாதிகளை ஒடுக்க இணைந்து பணியாற்றுவது குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடியில் அந்த பணம் வங்கதேச தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக ஹசீனா கூறி வருகிறார். இதற்கான ஆதாரங்களை அவர் அமெரிக்காவில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசும் போது நேரில் கொடுப்பார் என்றுன தகவல் வெளியாகி உள்ளது.
 
அண்டை நாட்டு தலைவர்களுடனான சந்திப்பு முடிந்ததும் பிரதமர் மோடி நியூயார்க் நகர முன்னாள் மேயரும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முன்னோடியுமான பிரபல தொழிலதிபர் ப்ளூம் பேர்க்கை சந்தித்து பேசுகிறார். பிறகு அமெரிக்க வாழ் இந்தியர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் மோடி பேசவுள்ளார். 28ம் தேதி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பி்ல் கிளிண்டனை மோடி சந்திக்க திட்டமிட்டுள்ளார். அன்று மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு வாஷிங்டன் புறப்பட்டு செல்வார். 29,30ம் தேதிகளில் வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்வார். 29ம் தேதி காலை அமெரிக்க  தொழில் துறையில் புரட்சி ஏற்படுத்திய கூகுள், போயிங் விமான நிறுவனம், ஜெனரல் எலக்ட்ரிக் உட்பட 15 முன்னணி நிறுவன தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசுவார்.
 
அந்த தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கம் அளிப்பார். இது தவிர 6 முக்கிய வர்த்தக நிறுவன தலைவர்களுடன் தனித்தனியே பேச்சு நடத்துவார். அன்றிரவு அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு ஒபாமா விருந்தளிக்கிறார். 30ம் தேதியும் பிரதமர் மோடி ஒபாமாவை சந்தித்து பேசுவார். அப்போது ஏராளமான திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதன் மூலம் அமெரிக்கா, இந்தியா நட்பில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இது தவிர ஏற்றமிகு இந்தியாவை உருவாக்க திட்டமிடும் மோடியின் நோக்கங்களுக்கு அமெரிக்கா உதவும் என்று தெரிகிறது. ஒபாமாவை சந்தித்த பிறகு 30ம் தேதியே பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டு  வருகிறார்.

No comments:

Post a Comment