Friday, September 12, 2014
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், நாகை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ரூ.3 கோடி மதிப்புள்ள 8 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு சென்றனர். இவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் 6 படகுகளையும், படகில் இருந்த 30 மீனவர்களையும் சிறை பிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
நேற்று பிற்பகல் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை, நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் வரும் 24ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 30 மீனவர்களும் நேற்று இரவு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். நாகை மாவட்டம் பூம்புகாரில் இருந்து 25 மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை ஒரு விசைப்படகு, 3 பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகு வேலாயுதத்துக்கு சொந்தமானது. இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் படகில் பிடித்து வைத்திருந்த 2 டன் மீன், வலைகளை பறிமுதல் செய்து, விசைப்படகில் 21 மீனவர்களை ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். ஒரு பைபர் படகில் தனியாக இருந்த செல்வகுமார் (24), சரண்ராஜ் (22) ஆகியோரை விட்டு விட்டனர்.
இதையடுத்து இந்த 2 பேரும் மற்ற 2 பைபர் படகுகளை கட்டி இழுத்துக்கொண்டு காரைக் கால் கிளிஞ்சல் மேடு மீனவர்கள் உதவியுடன் நேற்று காரைக்காலுக்கு வந்தனர். பிடித்து சென்ற 21 மீனவர்களை பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல், புதுச்சேரி யில் காரைக்கால் திருபட்டினம் பட்டினச்சேரியை சேர்ந்த பொன்னுசாமி(48), சுந்தரம்பிள்ளை (36), பூவரசன்(20), கோவிந்தமணி (30) ஆகியோர் கடந்த 7ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மீன்பிடித்துவிட்டு, கோடியக்கரையிலிருந்து தென்கிழக்கு பகுதி அருகில் வந்தபோது, இலங்கை கடற்படையினர் 4 பேரையும் கைது செய்தனர். ராமேஸ்வரம், நாகை மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 படகுகளின் மதிப்பு ரூ.3 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment