Tuesday, September 09, 2014
சென்னை::மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவியை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எந்த உதவியானாலும் அவற்றைச் செய்ய தமது அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இப்போதுதான் அம்மாநிலத்தில் மழையாலும், நிலச்சரிவாலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 2,500 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி கிட்டதட்ட 175 பேர் பலியாகி விட்டனர். இந்த வெள்ளம் பற்றி அறிந்ததும் பிரதமர் நரேந்திரமோடி அம்மாநிலத்திற்கு சென்றார். வெள்ள நிலவரம் குறித்து அம்மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.1000 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு ரூ.5 கோடி நிதியுதவி உடனடியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அம்மாநிலத்திற்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் உயரிழந்திருக்கிறார்கள். இந்த மழை வெள்ளத்தால் அம்மாநில மக்கள் மட்டுமின்றி அங்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகளும் சொல்லொணாத துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள நிலைமையை தேசிய பேரிடராக இந்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 ஆயிரம் பேரை ராணுவம் வெளியேற்றியுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் சார்பாக எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது தேவைப்படுவது மீட்புப்பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மட்டுமின்றி புனரமைப்பு பணிகளும் தேவைப்படுகிறது. எனவே வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவற்றையெல்லாம் செய்ய வேண்டியுள்ளது. துயரத்தில் சிக்கியிருக்கும் அந்த மாநிலத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவது நமது கடமை. எனவே முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதியை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் அந்த மாநிலத்திற்கு வேறு எந்த உதவியாக இருந்தாலும் அவற்றை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment