Wednesday, September 17, 2014

3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!

Thursday,September, 17, 2014
புதுடெல்லி::சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று (புதன்கிழமை) குஜராத் மாநிலம், ஆகமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.

ஆகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் பகல் 2½ மணிக்கு வந்திறங்கும் சீன அதிபரை மாநில கவர்னர் ஓ.பி.கோலி, முதல்- மந்திரி ஆனந்தி பென் படேல், வெளியுறவு துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். பாரம்பரிய முறைப்படி குஜராத் நடனங்களும் இதில் இடம்பெறும். அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்படுகிறது.

வரவேற்புக்கு பின்னர் சீன அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒரு ஒப்பந்தம், குவாங்டாங் மாகாணத்துக்கும், குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், இன்னொன்று குவாங்ஜவ் நகருக்கும், ஆகமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்தாகின்றன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்தாகும்.

சீன அதிபர் ஜின் பிங், பிரதமர் நரேந்திர மோடி இரு பெரும் தலைவர்களும் ஒரே நேரத்தில் ஆகமதாபாத்தில் இருப்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை வரவேற்று நகரில் பல்வேறு இடங்களில் தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜின் பிங், மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த வரலாற்று பெருமைமிக்க சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார். இதையொட்டி அந்த ஆசிரமத்துக்கு புத்துயிரூட்டப்பட்டுள்ளது. அங்கு அவரை பிரதமர் மோடி, முதல்-மந்திரி ஆனந்தி பென் படேல் வரவேற்கின்றனர்.

இதையடுத்து சபர்மதி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு சீன அதிபர் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் சிறிது தொலைவுக்கு நடந்து செல்கின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜின்பிங்குக்கு மோடி அறுசுவை சைவ விருந்து அளித்து கவுரவிக்கிறார்.

அதை தொடர்ந்து இரு தலைவர்களும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று சீன பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய-சீன உறவு மைல்களை நோக்கி அங்குலம், அங்குலமாக முன்னோக்கி செல்கிறது. முன்னோக்கி செல்கிற ஒவ்வொரு அங்குலமும், நாம் புதிய வரலாற்றை எழுதுவோம். இந்த பூமி கிரகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்க ஏற்ற வகையில், ஒவ்வொரு மைலையும் நாம் கடந்து செல்வோம்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வெற்று கணக்குகளை தாண்டிச் செல்லும். இரு தரப்புக்கும் இடையே தனித்துவமான தொடர்பு உள்ளது. அது புதிய தருணத்தை வரையறுப்பதாக அமையும்.

நமக்கிடையேயான உறவுகளில் உள்ள கணக்கும், தொடர்பும் வரலாற்றினை நம்மை எழுத வைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இந்திய-சீன உறவுகள் பல மைல் தொலைவுக்கு செல்வதோடு, இரு தரப்பு உறவினை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச்செல்லும். அது மட்டுமல்ல, ஆசியாவுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அது முன்னேற்றத்தையும், நல்லிணக்கத்தையும் அளிக்க முன்னெடுத்து செல்லும்.

உலக மக்கள் தொகையில் 35 சதவீதத்தை நாம் இரு நாடுகளும் பெற்றுள்ளோம். நமது உறவுகள் வலுப்படுகிறபோது, உலகின் 35 சதவீத மக்களும் நெருக்கம் ஆவார்கள்.

இதே போன்று, இந்தியா- சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு பெருகுகிறபோது, 35 சதவீத உலக மக்கள் தரமான மாற்றங்களை சந்திப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் அதிகாரபூர்வ பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

இந்தப் பேச்சு வார்த்தையில் எல்லைப்பிரச்சினை, புதிய முதலீடுகள், முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும்.

சீன அதிபர் ஜின்பிங்கின் இந்திய வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதர் லி யுசெங், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இரு நாடுகளும் நாகரீகத்தின் நீண்ட வரலாறு கொண்டவை. இரு நாடுகளும் வரலாற்றிடமிருந்து சில பிரச்சினைகளையும் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பிலும் தெளிவாக புரிந்து கொண்ட உறவினை உருவாக்குகிறபோது, அந்த விவேகத்தை கொண்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நான் அதை நம்புகிறேன். எல்லைப்பிரச்சினைக்கு நம்மால் சரியான தீர்வு காண முடியும்” என கூறினார்.
 

No comments:

Post a Comment