Sunday, August 31, 2014

Sunday, August 31, 2014
கியோட்டோ::ஜப்பானில் உள்ள பழமைவாய்ந்த புத்தர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு தரிசனம் நடத்தினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். நேற்று அவர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் அங்குள்ள புகழ் பெற்ற கியோட்டோ நகருக்கு சென்றார். அப்போது அவர் கியோட்டோ நகர மேயருடன் இணைந்து வாரணாசி நகரை ஸ்மார்ட்டி சிட்டியாக மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கியோட்டோ நகரத்தின் பங்களிப்புடன் வாரணாசியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது குறித்து இரு தரப்பினரும் ஒப்பந்தங்கள் மேற்கொண்டனர். அப்போது மோடியுடன் இந்திய தூதர் தீபா கோபாலன், கியோட்டோ நகர மேயர் தைசாகு சுடோசுவா ஆகியோரும் உடன் இருந்தனர்.
 
பின்னர் பிரதமர் மோடி இன்று காலை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கியோட்டோ நகரில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த தோஜி புத்த கோயிலுக்கு சென்றார். எட்டாம் நூற்றாண்டில் புத்த மதத்தின் பகோடா முறையில் கட்டப்பட்ட அந்த கோயிலில் சுமார் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தார். கோயிலுக்கு வந்த மோடியை தலைமை மதகுரு மோரி வரவேற்று கோயிலின் சிறப்புகளை விளக்கி கூறினார். ஜப்பானில் அமைந்துள்ள பகோடா வகை கோயில்களில் 57 மீட்டர் உயரத்துடன் அமைந்துள்ள மிகவும் உயரமான புத்த கோயில் இதுவாகும். இதுகுறித்து மதகுரு கூறுகையில், Ôஇரண்டு பிரதமர்களும் எங்களது கோயிலுக்கு வந்துள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுÕ என்றார்.கோயிலுக்கு மோடி வந்த போது ஏராளமான இந்தியர்கள் இந்திய தேசிய கொடியை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். தோஜி புத்த கோயில் யுனெஸ்கோவில் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
புத்த கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு மோடி, கியோட்டோ பல்கலை கழகத்திற்கு சென்றார். அங்கு நோபல் பரிசு பெற்ற மருத்துவ விஞ்ஞானி யமனாகாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய்களை தடுப்பது குறித்தும், பரம்பரை பரம்பரையாக தொடரும் ரத்த செல் அனீமியாவை கட்டுப்படுத்தும் நோக்கிலான ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இந்தியா ஜப்பான் இடையிலான ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment