Friday, August 15, 2014

சுதந்திர தின விழா கோலாகலக் கொண்டாட்டம்; செங்கோட்டையில் முதல் முறையாக மோடி தேசிய கொடியை ஏற்றினார்!

 Friday, August 15, 2014
இந்திய சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை யொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.

டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி காலை மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவது இதுவே முதல் தடவை ஆகும். விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 7.20 மணிக்கு நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வந்தார். அவர் வந்ததும் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர், நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில்; பிரதமராக அல்லாமல் நாட்டு மக்களின் முதல் ஊழியனாக இருக்கவே விரும்புகிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்வோம். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைப்பதற்கு உறுதியேற்கும் நாள் இது. தடைகளைத் தகர்த்தெறிந்து நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் என்று கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார். சுதந்திர தினத்தையொட்டி முன்னதாக தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பதே கடந்த ஆண்டுகளில் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்தாண்டு பிரதமர் மோடி உரை எதையும் தயாரிக்காமல், சில குறிப்புகளை மட்டும் வைத்துகொண்டு பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர தின விழாவின் போது தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment