Sunday, August 31, 2014
இலங்கை::இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா பயன்படுத்தி வருவதாக, அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதவி விலகிச் செல்லும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை விவகாரத்தில் மிக அதிகளவில் பக்கச்சார்பாக நடந்துகொண்டார். குறிப்பாக அமெரிக்காவினதும் புலம்பெயர் மக்களினதும் தேவையை நிறைவேற்றும் நோக்கில் அவர் செயற்பட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கை விவகாரம் குறித்து நவநீதம் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில் இருந்த விடயங்கள் தருஷ்மன் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களாகும். தருஷ்மன் அறிக்கையின் விடயங்களையே நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செலவுக்கான நிதி மனித உரிமைப் பேரவையின் வரவு செலவுத்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் அந்த நிதியை வழங்குவதாக மேற்கு நாடுகள் உறுதியளித்தன. இதிலிருந்து சில நாடுகளின் தேவைக்கு ஏற்ப இவ்வாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தெளிவாகின்றது.
மேலும் தனக்கு அடங்கிப்போகாத மற்றும் தனது பேச்சைக் கேட்காத நாடுகளின் அரசாங்கங்களை மாற்றியமைப்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். உலகின் சில நாடுகளில் அமெரிக்கா இவ்வாறு செயற்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையிலும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் நோக்கமாகவுள்ளது. இந்த தாற்பரியம் புரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா ஊடாக தமது தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது.
அதனால்தான் கூட்டமைப்பின் செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தலையிட்டால் அது இங்குள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள உள்நாட்டுத் தரப்புடனேயே பேச்சு நடத்தவேண்டும். அதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது
உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இதேவேளை கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டுத் தரப்பினரை சந்தித்தாலும் இந்தியா எந்தக் கட்டத்திலும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுக்குமே தவிர அழுத்தங்களை முன்வைக்காது. தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைக்காண்பதையே இந்தியா விரும்பும் என்றார்.
No comments:
Post a Comment