Friday, August 15, 2014

இந்தியாவின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது!

Friday, August 15, 2014
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய பிரதித் துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்திய பிரதித் துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தியினால் இந்திய நாட்டின் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து துணைத் தூதுவரின் உரை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவில் இருந்து வருகைதந்து இங்கு பல துறைகளில் பணி புரிபவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
 
வடக்கில் இந்தியத் திட்ட உதவிகளால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர் என பெருமிதம் வெளியிட்டார் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதித் துணைத் தூதுவர் எஸ்.தட்ணாகமூர்த்தி (டி.எஸ்.மூர்த்தி).

யாழ். துணைத் தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு பெருதமிதம் வெளியிட்டார்.
அந்த உரையில் அவர் கூறியவை வருமாறு:-
 
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் 2010 நவம்பரில் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இவ்வருடம் நான்காவது தடவையாக இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம்.
 
பல பாரிய அபிவிருத்திகளும் நிகழ்வுகளும் இந்நான்கு வருடத்தில் இடம்பெற்றுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் எமது முன்னாள் துணைத் தூதுவர் திரு.வெ.மகாலிங்கம் அவர்களின் பங்களிப்பை நினைவு கூர விரும்புகிறேன். அவர் தனது பதவிக் காலத்தில் வடமாகாணத்திற்கு இந்தியாவால் வழங்கப்பட்ட அனைத்து அபிவிருத்தி உதவித் திட்டங்களையும் அர்ப்பணிப்புடனும் மனிதாபிமானத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.
 
இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் யுத்தத்திற்குப் பின்னர் உதவியும் ஆதரவும் தேவைப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு பலனளித்தன. அத்திட்டங்களில் சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டம், விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியதுமான அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை, விரைவில் வேலைகள் நிறைவுறும் நிலையிலுள்ள வவுனியா வைத்தியசாலைக்கான 200 கட்டில்களுடைய கட்டடத் தொகுதி, புதிய திட்டங்களான யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியற் பீடங்களை கிளிநொச்சியில் நிறுவுவதற்கான உதவித்திட்டம்,
 
துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றைக் கட்டுதல் போன்றவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் புதிய அரசும் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
 
இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான இந்திய புகையிரதக் கட்டுமானக் கம்பனி, இந்தியன் வங்கி, இந்திய ஸ்டேட் பாங்க் என்பனவும் தமது பிரசன்னத்தின் மூலம் வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு தாராளமான ஆதரவை வழங்குகின்றன.
யாழ்.தேவி புகையிரதமானது ஒக்ரோபர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடு மற்றும் தலைமன்னாருக்கிடையிலான சேவை டிசெம்பர் மாதத்தில் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. எம்மைப் பெருமை கொள்ள வைத்த இந்தியப் பொதுத்துறை நிறுவனமான இந்திய புகையிரதக் கட்டுமானக் கம்பனிக்கு எமது நன்றிகள்.
 
இக்கம்பனியால் கட்டப்பட்ட வவுனியாவுக்கும் பளைக்குமிடையிலான புகையிரதத் தடத்திலான சீரான மற்றும் சொகுசான பிரயாணம் பற்றி கேள்விப்படும்போதெல்லாம் தடங்களின் சர்வதேசத் தரம் பற்றியும் எதிர்காலத்திலும் பயணிகளால் பாராட்டப்படத்தக்கதான தன்மைபற்றியும் எம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
 
2012 ஒக்ரோபரில் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டமானது பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இன்று வரை 14,514 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 19,703 வீடுகள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைப் பயனாளருக்கு கையளிக்க வன்னியின் உட்பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம், பயனாளிகள் இந்திய அரசுக்கு மனிதாபிமான உதவிக்காக தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பர். அவர்களுடைய மலர்ந்த முகங்கள் எமது திட்டங்கள் தேவையுடையோருக்கான வரங்கள் என்பதைப் புலப்படுத்துகின்றன.
 
இந்திய அரசானது வடமாகாண மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் இலங்கை அரசுடனிணைந்து உதவிவருகிறது. கௌரவ ஆளுநர் அவர்கள், கௌரவ முதலமைச்சர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், மாகாணசபை அவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அனைத்து அரச அதிகாரிகள், எமது செயற்பாட்டுப் பங்காளிகள் அனைவருக்கும் இந்திய உதவித்திட்டத்திலான நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழங்கும் ஆதரவுக்காக நன்றி கூற விரும்புகிறேன்.
 
நுண்கலைகளை வளர்க்கவும் கலாச்சார உறவுகளைப் பலப்படுத்தவும் இந்தியத் துணைத் தூதரகமானது கலை நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குதல் மூலமும், இசை, நடன துறைகளில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதன் மூலமும் தனது பங்களிப்பை வழங்கிவருகிறது என்பதை தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
 
தெய்வீக 'சுகானுபவம் III' எனப் பெயரிடப்பட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் மூன்றாவது வருடமாக இம்முறை, பிரபல பரத நாட்டியக் கலைஞர் திருமதி. லாவண்யா ஆனந்த் மற்றும் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் திரு. ராம்பிரசாத் ஆகியோர் வடமாகாணத்தின் நுண்கலை பயிலும் மாணவருக்கான பயிலரங்குகளை நடத்தவுள்ளதோடு நல்லூர் சங்கிலியன் தோப்பில் நல்லூர் திருவிழா காலத்தில் இம்மாதம் 24ஆம் 25ஆம் திகதிகளில் நடன மற்றும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தவுள்ளனர் என்பதை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பரதநாட்டிய பெருங்கலைஞர் கலாநிதி. பத்மா சுப்பிரமணியம் அவர்களை கௌரவித்த அனைத்து நுண்கலை ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. இது யாழ்ப்பாணத்தவர்கள் இந்தியக் கலைஞர்களை எவ்வாறு உயர்வாக மதிக்கின்றனர் என்பதை புலப்படுத்துகிறது.
 
இந்தியத் துணைத் தூதரகத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் 68ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு பெருமளவில் இவ்வைபவத்தில் கலந்து கொண்டமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment